கோவையில் நீர்நிலைகளை காக்க போராடும் 'வாட்டர் வாரியர்' மணிகண்டனின் நெகிழ்ச்சி கதை..!
வாட்டர் வாரியர் விருது மூலம் 1.80 இலட்ச ரூபாய் பணம் கிடைத்தது. ஊரடங்கு நெருக்கடி காலத்திலும், அப்பணத்தை சொந்த செலவிற்கு பயன்படுத்தாமல் சமூகப் பணிகளுக்கு வழங்க வேண்டும் என உறுதியாக இருந்தேன்- மணிகண்டன்
இயற்கையின் மீதும், சூழல் மீதும் இளைஞர்களின் ஆர்வம், அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பல தன்னார்வலர்கள் இயற்கையையும், சூழலையும் பாதுகாக்க போராடி வருகின்றனர். அந்த வகையில் கோவையில் நீர்நிலைகளை பாதுகாக்கும் அளப்பரிய பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஈடுபட்டு வருகிறார். புவியின் ஈரம் காத்து பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தொடர்ச்சியாக களப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது பணிகளை பாராட்டும் வகையில் மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 2019 ம் ஆண்டிற்கான 'பெஸ்ட் வாட்டர் வாரியர்' விருது வழங்கி வழங்கி கெளரவித்துள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். 38 வயதான இவர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். சிறு வயதில் இருந்து சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் இவர், 2017ஆம் ஆண்டு நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் இவ்வமைப்பை தன்னார்வலர்கள் உதவியுடன் துவக்கினார். பல்வேறு தரப்பினரின் நிதியுதவி மற்றும் தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு மிக்க களப்பணி மூலம் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். 200 வார களப்பணிகள் மூலம் சுமார் 15 ஆயிரம் தன்னார்வலர்களை ஒருங்கிணைந்து 5 குளங்கள் மற்றும் 5 குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் இருந்த 113 டன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றப்பட்டுள்ளது. 19.5 கிலோ மீட்டர் தூர நீர்வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 400 ஏக்கர் சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டுள்ளது.
வெள்ளலூர் குளக்கரையில் 300 வகையான 8 ஆயிரம் மரங்களை கொண்டு மியாவாக்கி முறையில் அடர் வனம் அமைத்து இருப்பதோடு, அங்கு பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் தேனீ பூங்காக்களை உருவாக்கி பல்லுயிர் வாழிடமாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள், 5 ஆயிரம் மூலிகை செடிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 15200 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது எனப் பல்வேறு பணிகளை செய்து உள்ளதாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் 200ஆவது வார களப்பணியின் போது வாட்டர் வாரியர் விருது மூலம் கிடைத்த ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பேரூர் பெரிய குளத்தில் மியாவாக்கி முறையில் அடர் வனப்பூங்கா அமைக்க மணிகண்டன் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் 6.5 இலட்ச ரூபாய் செலவில் கட்டிட கழிவுகளை அகற்றி, 200 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு சொட்டு நீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மணிகண்டன் கூறுகையில், "வாட்டர் வாரியர் விருது கிடைத்தது சமூகப் பணிக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன். விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. விருது தொகையான 2 இலட்சத்தில் வருமான வரி பிடித்தம் போக 1.80 இலட்ச ரூபாய் பணம் கிடைத்தது. கொரோனா ஊரடங்கு நெருக்கடி காலத்திலும், அப்பணத்தை சொந்த செலவிற்கு பயன்படுத்தாமல் சமூகப் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்பணத்தை முழுமையாக அடர் வனம் அமைக்க வழங்கி இருப்பது மன நிறைவை தருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சில வருடங்களுக்கு முன்பு எங்களது வீட்டின் அருகே இருந்த கிணற்றை தண்ணீர் தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். ஒரு நாள் அந்த கிணறு வறண்டு விட்டது. அதற்கான காரணத்தை தேடி அவ்வழியாக செல்லும் ஓடைப்பாதையில் சென்ற போது, மதுக்கரை தடுப்பணை சேதமடைந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து நான் அளித்த புகாரின் பேரில், அந்த தடுப்பணை சீரமைக்கப்பட்டது. அது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையை தந்தது. அதையடுத்து பல்வேறு அமைப்புகள் உடன் இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்க பணியாற்றினேன். பின்னர் குளங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்கும் நோக்கில் 2017 ம் ஆண்டில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி பணியாற்றி வருகிறோம்.
தண்ணீர் மனிதர் என அழைக்கப்படும் ராஜேந்திர சிங், ஆற்றின் உயிர் ஆதாரமான நீரோடைகளை பாதுகாத்தல் ஆறு பாதுகாக்கப்படும் என்கிறார். நிலத்தின் ஈரத்தன்மை அதிகரிப்பதன் மூலம் பசுமை பரப்பை அதிகரிக்க முடியும். அதன் மூலம் மழையளவை அதிகரிக்க முடியும் என்கிறார். எனவே நொய்யல் நதியை பாதுகாக்கும் நோக்கில் குளங்களையும், நீர்வழிப் பாதைகளையும் தூர்வாரி சீரமைத்து வருகிறோம். நொய்யல் நதி வரலாற்று சிறப்பு மிக்கது. இயற்கையாக உருவான நதியோரத்தில், இன்றைய நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பழங்காலத்திலேயே செயற்கையாக குளங்கள், வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்க வேண்டும். பாழ் ஆக்கக்கூடாது. ஆறு உற்பத்தியாகி சமவெளி பகுதிக்கு வரும் போது, கிராமங்களில் நேரடியாக சாக்கடை நீர் கலக்கப்படுகிறது. இதனை தடுத்து கழிவு நீரை சுத்திகரித்து, வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். நொய்யல் உயிரோட்டத்துடன் இருக்க, நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும். நீர் நிலைகள் பல்லுயிர் வாழிடமாக உருவாக வேண்டும். அதற்காக எங்களால் முடிந்தளவு பணிகளை செய்து வருகிறோம்.
களப்பணிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இயற்கைக்கும், மக்களுக்கும் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். அப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்" என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.