Doctor Ashokan | காட்டு விலங்குகளின் காவலன், வன கால்நடை மருத்துவர் அசோகனின் நெகிழ்ச்சி கதை..!
35 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கழுதைப் புலி, பறவைகள், பாம்புகள், விலங்குகள் என 500 க்கும் மேற்பட்ட வன உயிரினங்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மீது பரிவு செலுத்தவும், அவற்றை கவனித்துக்கொள்ளவும் பலருண்டு. ஆனால் காட்டில் வாழும் வன உயிரினங்கள் மீது கவனம் செலுத்த சிலர் மட்டுமே உண்டு. ஏனெனில் காட்டில் வாழும் வன உயிரினங்கள் என்றாலே பலருக்கும் பயம் ஏற்படுவது இயல்பு. ஆனால் எந்த பயமும் இன்றி ஆபத்தான கட்டத்தில் உள்ள வன உயிரினங்களை மீட்டு காப்பாற்றி வருகிறார், வன கால்நடை மருத்துவரான அசோகன்.
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் அசோகன் கைபட்டால் எந்த பாம்பும் உயிர் பிழைக்கும் என்ற அளவிற்கு பாம்புகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றி உள்ளார். கிராமப் பகுதியோ அல்லது வனப் பகுதியோ எதுவாக இருந்தாலும் வன விலங்குகளுக்கு பாதிப்பு என்றால் சிரமம்பாராது சென்று தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் வீரதீர செயலுக்கான அண்ணா விருது மருத்துவர் அசோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை பூர்வீகமாக கொண்டவர் மருத்துவர் அசோகன். எடப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த அவர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார். 1990ஆம் ஆண்டு சின்னசேலம் பகுதியில் கால்நடை மருத்துவராக பணியை துவங்கிய அசோகன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவைப் பணியாற்றி வருகிறார்.
1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை முதுமலை புலிகள் காப்பகத்தில் வன கால்நடை மருத்துவராக அசோகன் பணியாற்றினார். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட 5 காட்டு யானைகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார். 1998ம் ஆண்டில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அடுத்தடுத்து 22 பேரை கொன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை அலற விட்ட மூர்த்தி என்ற மக்னா யானையை சுட்டுக் கொல்ல கேரளா வனத்துறையினர் திட்டமிட்டனர். தமிழ்நாடு எல்லைக்குள் வந்த அந்த யானையின் உடலில் இருந்து ஏராளமான துப்பாக்கி குண்டுகளை வெளியே எடுத்து சிகிச்சை அளித்து காப்பாற்றியதில் அசோகனுக்கு முக்கிய பங்குண்டு. தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை மருத்துவராக உள்ளார்.
மருத்துவர் அசோகன் இந்தியாவிலேயே முதன்முறையாக 14 மலைப் பாம்புகளுக்கு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். கிராம மக்களால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த கழுதைப் புலிக்கு ஆறு மாதம் சிகிச்சை அளித்து காட்டில் விட்டார். 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கழுதைப் புலி, பறவைகள், பாம்புகள், விலங்குகள் என 500 க்கும் மேற்பட்ட வன உயிரினங்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார்.
இது குறித்து மருத்துவர் அசோகன் கூறுகையில், “வன கால்நடைப் பணியை பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் எனக்கு சிறு வயது முதலே விலங்குகள் மீது பரிவு இருந்தது. அதனால் எனது பணியை சாவலாக எடுத்துக்கொண்டு செய்து வருகிறேன். பெரியளவு வசதிகள் இல்லாத காலத்திலேயே காட்டு யானைகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளேன். முதுமலையில் பணியாற்றிய போது டாக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
நாகப்பட்டினத்தில் பணியாற்றிய போது கடல் ஆமைகள் இனப்பெருக்கம் மூலம் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தேன். கோவை வ.உ.சி பூங்காவில் இனப்பெருக்கம் மூலம் பறவைகள், பாம்புகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்தேன். அதேபோல ஏராளமான காட்டு யானைகள் மீட்புப் பணிகள் மற்றும் காட்டு யானைகளை பிடிக்கும் பணிகளில் பங்காற்றி உள்ளேன்.
எனது சம்பளத்தில் இருந்து செலவளித்து பல விலங்குகளுக்கு இரவு பகல் பாராமல் ஆர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சையளித்து காப்பாற்றி உள்ளேன். வன விலங்குகள் மனிதர்களை பார்த்தால் பயப்படும். அவற்றுடன் பழகி சிகிச்சையளிக்க வேண்டும். சிகிச்சையளிக்கும் போது அவற்றை நாம் காப்பாற்ற முயல்கிறோம் என்பதை உணர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும்.
உயரிய விருதான அண்ணா விருது கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் விருதை நேரில் வாங்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. இருப்பினும் இந்த விருது வன கால்நடை துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினருக்கு தூண்டுதலாக அமையும்” என அவர் தெரிவித்தார்.