கோவையில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றாமல் போடப்பட்ட தார்சாலை; குமுறும் வாகன ஓட்டிகள்
எருக்கம்பெனி பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை அகற்றாமல், வளைத்து நெளித்து தார்சாலை போடப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பெனி பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை அகற்றாமல், வளைத்து நெளித்து தார்சாலை போடப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கோவையில் சாலைகளை சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது புதிதாக தார் சாலை போடும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. இரவு நேரங்களில் மட்டும் நடக்கும் இப்பணிகள் அதிகாலை வரை நடக்கிறது. இதில் கவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பெனி பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு பழுதடைந்த மின் மயான வண்டி மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளை அப்புறப் படுத்தாமல் சாலை போடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வாகனங்கள் நிற்கும் பகுதியில் சாலை வாகனங்களுக்கு தகுந்தாற்போல் வளைந்து நெளிந்து செல்லும் வகையில் போட்டுள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “கோவையில் பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளன. மேம்பால பணிகள், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் என பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், எந்த சாலையிலும் செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது சாலைகள் சீரமைக்கப்பட்டு வந்தாலும், முறையாக தார் சாலைகள் அமைக்கப்படுவதில்லை. அவசர கதியில் சாலைகள் போடப்படுகின்றன.
எருக்கம்பெனி பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை கூட அகற்றாமல் சாலை போட்டுள்ளனர். வாகனத்திற்கு தகுந்தார்போல சாலைகளை வளைத்து நெளித்து போட்டுள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் அடிபம்பு, டூவிலர் மீது சாலைகள் போடப்பட்டன. அந்த சாலைகளை போட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் அலட்சியமாக அவசர கதியில் வாகனங்களை அகற்றாமல் சாலை போட்டுள்ளனர். இதனால் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது.
தரமான வகையில் சாலைகளை போட வேண்டும். கோவையில் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணிகளை மேற்கொள்ளும் முன் அந்த இடங்களில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவற்றை அகற்றிவிட்டு சாலைகளை போட்டால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்தனர்.
TTF Vasan : ஜி.பி. முத்து உடன் பைக்கில் அதிவேக பயணம்.. டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்