’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’ : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!
50 இலட்ச ரூபாய் திருமணம்செய்ய திட்டமிட்டு இருந்தோம். 5 இலட்ச ரூபாய் செலவில் எளிமையாக திருமணம் செய்தோம். ரோட்டரி மூலம் 38 இலட்ச ரூபாய்க்கு உதவிகளை வழங்கியுள்ளோம்.
திருப்பூரில் கொரோனா காரணமாக திருமணம் எளிமையாக நடத்தியதால் , திருமணச் செலவில் மிச்சமான 37.66 லட்ச ரூபாயை நன்கொடையாக தம்பதியினர் வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுபாதிப்பு நமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஆடம்பரமாக நடந்த திருமணங்களை எளிமையாக நடத்தும்படி மாற்றி விட்டது. கொரோனா தொற்றுப் பாதிப்புகளாலும், ஊரடங்கு விதிமுறைகளாலும் குறைந்த அளவிலான உறவினர்களை மட்டுமே அழைத்து நடத்தப்படுகின்றன. இதனால் திருமணம் செய்யும் வீட்டார்களின் செலவு, சுமைகளை பாதியாக குறைத்துள்ளது. வழக்கமாக திருமணத்திற்காக ஆகும் செலவில் பெரும்பான்மை செலவுகள் குறைந்து விட்டன. இந்நிலையில் எளிமையாக திருமணம் நடத்தியதால் மிச்சமான 37.66 லட்ச ரூபாயை கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் பல்வேறு முறைகளில் திருப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் அருள்செல்வம். இவரது இரண்டாவது மகன் அருள் பிரனேஷ். பி.டெக் பட்டதாரியான இவருக்கும் திருப்பூர் விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் - கவிதா தம்பதியினர் மகள் அனு என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. கடந்த 14்-ஆம் தேதி காங்கேயம் - வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்தை எளிமையாக நடத்தியதால், திருமணத்திற்காக திட்டமிட்ட செலவுத் தொகையில் மீதமான பணத்தை நற்பணிகளுக்கு தர மணமக்களின் வீட்டார் முடிவு செய்துள்ளனர். அதன்படி திருமண மேடையிலேயே 37.66 லட்ச ரூபாயை பல நற்பணிகளுக்காக கொடுத்துள்ளனர்.
திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு - 5 லட்சம், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு 11 லட்சம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு 2 லட்சம் ரூபாய், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு ஐ.சி.யு., யூனிட் அமைக்க 7.66 லட்சம், கொரோனா பாதிப்பால் மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் 8 குடும்பங்களுக்கு 7 லட்சம் , மங்களம் ரோடு பாரபழையம் அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்ட 5 லட்சம் என மொத்தமாக, 37.66 லட்ச ரூபாயை வாரி வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து மணமகனின் தந்தை அருள்செல்வம் கூறுகையில், ”நான் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப்பில் உள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்பு எனது இளைய மகனுக்கு திருமணம் நடைபெற்றது. எளிமையாக திருமணம் நடந்ததால், திருமணச் செலவிற்காக ஒதுக்கிய 50 இலட்ச ரூபாயில் மீதமான பணத்தை ரோட்டரி மூலம் பல நலத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளோம். 50 இலட்ச ரூபாய்க்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளோம். மீதமுள்ள பணத்தையும் விரைவில் வழங்குவோம். இவ்வாறு உதவிகள் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
மணமகன் அருள் பிரனேஷ் கூறுகையில், ”50 இலட்ச ரூபாய் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தோம். 5 இலட்ச ரூபாய் செலவில் எளிமையாக திருமணம் செய்தோம். ரோட்டரி மூலம் 38 இலட்ச ரூபாய்க்கு உதவிகளை வழங்கியுள்ளோம். மீதி பணத்தையும் விரைவில் நலத்திட்டங்களுக்கு வழங்குவோம். கோவிட் காலத்தில் கல்யாணம் செய்பவர்கள் இதுபோல இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவினால் பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்தார். தானுண்டு, தன் குடும்பமுண்டு என்றில்லாமல் மற்றவர்களுக்கு உதவிய இக்குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், மணமக்களுக்கு நீடுழி வாழ வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.