பதவி மாற்றம் குறித்து பரபரப்பு… உண்மையை வெளிப்படுத்திய செங்கோட்டையன்...
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆ.ராசாவின் கருத்துகள் தூய்மையான நோக்கத்தில் இல்லை என கடுமையாக விமர்சித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் சமீபத்திய அரசியல் விவகாரங்கள் தொடர்பாக விளக்கம் அளித்தார். தமிழக முதல்வர் தலைமையில் மாநிலம் வளர்ச்சி பாதையில் முன்னேற வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார். அனைத்து தரப்பு மக்களும் அரசின் நலத்திட்டங்களின் பயனை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், ஊழலற்ற ஆட்சி அமைப்பதே முதல்வரின் கனவாக உள்ளதாகவும், அதற்காக அமைச்சர்கள் தங்கள் துறைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
திமுக எம்.பி. ஆ.ராசா தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “காய்கின்ற மரத்துக்கு கல்லடி விழும்” என குறிப்பிட்டார். ஆ.ராசா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும், அவரது கருத்துகளை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் விமர்சித்தார். மேலும், அவரது கருத்துகளில் தூய்மையான நோக்கம் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கமளித்த அவர், மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறினார். நிதித்துறையில் இருந்தால் பணிகள் பெரும்பாலும் சென்னையை மையப்படுத்தியதாக இருக்கும் நிலையில், வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்தார்.
நிதிச் சுமை காரணமாக பதவி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார். அனைத்து கருத்துகளுக்கும் பதில் அளிக்க முடியாது என்றும், தன்னுடைய விருப்பத்தை முதல்வரிடம் தெரிவித்ததன் பேரிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















