Nilgiri Mountain Train: தொடர் விடுமுறை... நீலகிரிக்கு சிறப்பு மலை இரயில்கள் இயக்கம்
சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. ஊட்டிக்கு சாலை வழியாக செல்வதும், மலை இரயிலில் ஊட்டிக்கு செல்வதும் ஒன்றல்ல. மலை இரயில் பயணம் என்பது ஊட்டியை வேறொரு கோணத்தில் பார்க்க வைக்கும், தவற விடக்கூடாத ஒரு உன்னத பயண அனுபவமாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயில், நீலகிரி மலை இரயில் தான். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலை இரயில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுந்து வருகிறது. மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தில் இருந்து மலை இரயில் காலை 7. 10 மணிக்கு உதகமண்டலத்தை நோக்ககி 46.61 கிலோ மீட்டர் தூரப் பயணத்தை துவங்கும். 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை இரயிலில் இருந்து, மலைகள், அடர்ந்த காடுகள், ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள் இயற்கையின் ஏழில் கொஞ்சும் கண் கொள்ள காட்சிகளை காண முடியும். பின்னர் 12 மணிக்கு இந்த இரயில் உதகை இரயில் நிலையத்தை அடையும். இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிறப்பு இரயில்கள் இயக்கம்
சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மலை இரயிலில் பயணிக்காமல் பலரின் நீலகிரி பயணம் நிறைவடையாது. இதன் காரணமாக சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என இரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற 16, 17 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் எனவும், முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்களில் குன்னூர் - உதகை சிறப்பு ரயில், குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு கிளம்பி, 9.40 மணிக்கு உதகை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல உதகையில் இருந்து மாலை 4.45 மணிக்கு கிளம்பி, 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதகையில் இருந்து கேத்தி சென்று மீண்டும் உதகை வரும் ரயில் அந்த நாட்களில் 3 முறை இயக்கப்படும் எனவும், காலை 9.45, 11.30 மற்றும் மாலை 3 மணிக்கு உதகையில் இருந்து இந்த இரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.