பாஜக ஐடி விங்கிற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் - எஸ்.பி.வேலுமணி அறிவுரை
அதிமுக பிரமுகர்கள் பாஜகவில் இணையுள்ளதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
கொங்கு மண்டல பகுதியைச் சேர்ந்த சில முக்கிய அதிமுக பிரமுகர்கள் பாஜகவில் இணையுள்ளதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. நேற்று முக்கிய நபர்கள் சிலர் கட்சியில் இணைவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். ஆனால் இறுதி வரை யாரும் இணையாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பின்னர் அந்நிகழ்ச்சி நடைபெறும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
இதனால் நேற்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி இறுதிவரை நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனிடையே இன்று காலை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, கோவை வடக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அம்மன்.அர்ஜுனன், பாஜகவில் இருந்து இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுகவில் இணையுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன்.அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.கே.கந்தசாமி, ஜெயராம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "பாஜக ஐடி விங் வெளியிடும் தகவல்களை எல்லாம் பார்க்க நேரமில்லை. தற்போது மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. உலக அளவில் அதிக தொண்டர்களைக் கொண்ட 7வது கட்சியாக அதிமுக உள்ளது. இந்த கட்சி நமது தாய்வீடு போல. சாதாரணமாக இருந்த நம்மை எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்த கட்சி அதிமுக. எல்லோரும் தாய் வீட்டிற்குத் தான் வருவார்கள். தாய் கழகத்தை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். ’டோன்ட் கேர்’ என விட்டுவிடுங்கள். கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை சொல்லியே வாக்காளர்களிடம் மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்போம். மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, “சிங்கை கோவிந்தராஜன் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. அம்மா, எம்.ஜி.ஆர். வழியில் பயணித்து சிங்காநல்லூர் பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அவர் கொண்டு வந்தார். அவர் வழியில் அவரது மகன் சிங்கை ராமசந்திரன் பணியாற்றி வருகிறார். சிறப்பான முறையில் 4 ஆண்டுகள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றினார். எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வோம். கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.