’ஹாட் பாக்ஸ்களால் ஹாட்டாகும் கோவை’ - பெட்டி பெட்டியாக ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்..!
கோவையில் பரப்புரை மேற்கொண்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவையில் 70 லாரிகளில் வாக்காளர்களுக்கு கொடுக்க ஹாட் பாக்ஸ்கள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. சுகுணாபுரம் பகுதியில் ஹாட் பாக்ஸ்களை ஏற்றி வந்த மினி ஆட்டோவை சிறை பிடித்து போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு திமுகவினர் ஹாட் பாக்ஸ்கள் வழங்கி வருவதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கோவையில் பரப்புரை மேற்கொண்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவையில் 70 லாரிகளில் வாக்காளர்களுக்கு கொடுக்க ஹாட் பாக்ஸ்கள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி நஞ்சுண்டாபுரம் பகுதி 62 வார்டில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனில் பரிசு பொருட்களை வைத்திருப்பதாக அதிமுகவினர் அங்கு திரண்டனர். இது குறித்து காவல் துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்தனர். அப்போது உடனடியாக கதவை திறக்க வேண்டுமென அதிமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், தோட்டத்தின் உரிமையாளர் நீண்ட நேரமாக வராத காரணத்தினால் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது சுமார் 13 பெட்டிகள் இருந்தது. அதில் இரண்டு பெட்டிகள் திறக்கப்பட்ட நிலையில் அதில் ஹாட் பாக்ஸ் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஹாட் பாக்ஸ் உள்ளே பணம் இருக்க கூடும் எனவும், எனவே திறந்து காண்பிக்க வேண்டி அதிமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில் ஹாட்பாக்ஸ் திறக்கப்பட்டது. ஆனால் அதில் பணம் எதுவும் இல்லாததை தொடர்ந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர். இது குறித்து எழுந்த புகாரின் பேரில் காவல் துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரியின் கணவர் சிவசாமி, தனது மனைவிக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிக்கும் போது பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வினியோகம் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து தகவலறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினர் ஹாட் பாக்ஸ் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் போது கையும் களவுமாக பிடித்தனர். இது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன், ”திமுக வேட்பாளரின் கணவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இது போல பொள்ளாச்சியில் பல பகுதிகளில் திமுகவினர் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கி வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இதேபோல கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெலுங்குபாளையம் 78 ஆவது வார்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க திமுகவினர் ஹாட் பாக்ஸ் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிமுக வேட்பாளர் கருப்புசாமி மற்றும் நிர்வாகிகள் வாகனத்தை சிறை பிடித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பொருட்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஹாட் பாக்ஸ் குடோனை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை எனவும் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். மேலும் திமுகவினர் மீது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யாமல் காப்பாற்றுவதாகவும், புகாரளித்த அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.