சத்குரு கோவைக்கு கிடைத்த ஆசிர்வாதம்! கர்மா புத்தக அறிமுக விழாவில் அன்னபூர்ணா ஶ்ரீனிவாசன் புகழாரம்!
ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில் (ஆக 18) அறிமுகம் செய்யப்பட்டது.
சத்குரு கோவைக்கு கிடைத்த ஆசீர்வாதம்!
கர்மா புத்தக அறிமுக விழாவில் அன்னபூர்ணா ஶ்ரீனிவாசன் புகழாரம்!
ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில் (ஆக 18) அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் பேசிய அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் அவர்கள், சத்குரு உலகம் முழுவதும் சுற்றினாலும் அவர் இருப்பது கோயம்புத்தூர், இதை விட கோவை மக்களுக்கு வேறென்ன ஆசீர்வாதம் இருக்க முடியும் எனக் கூறினார்.
கோவை பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அசெம்பிளி ஹாலில் நடைபெற்ற விழாவில் புத்தகத்தின் அறிமுகப் பிரதியை ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. டி. ஶ்ரீனிவாசன் அவர்கள் வெளியிட அதனை சப்னா புக் ஹவுஸின் தலைமை நிர்வாகி திரு. வி. கார்த்திகேயன் அவர்கள் பெற்றுக் கொண்டார். பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் திரு. எஸ்.வி. பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
அவரைத் தொடர்ந்து அன்னபூர்ணா ஶ்ரீனிவாசன் அவர்கள் பேசுகையில் "இந்த புத்தகத்தை தொடர் வாசிப்பின் மூலம் ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள முடியும். என் தந்தையும் சத்குருவும் நல்ல நண்பர்கள். சத்குரு ஆரம்ப காலங்களில் என் தந்தையை அவ்வப்போது நேரடியாக சந்தித்து பேசுவார். அப்படி ஒரு முறை அவர் பேசிவிட்டு சென்ற பின் என் தந்தை என்னிடம் சொன்னார் 'இன்று கோவையை தேடி வந்திருக்கும் இவரைத் தேடி, ஒரு நாள் கோவையே செல்லும்” என்றார். என்னுடைய இளம் வயதில் என் தந்தை சொன்னது இன்றும் நினைவில் ஆழமாக உள்ளது.
அவர் கூறியதைப் போன்று அந்த பரிணாம வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன். இன்று உலக வரைபடத்தில் ஈஷா இருக்கிறது. அங்கு வந்து செல்லாத தலைவர்களே கிடையாது. மேலும் ஆதியோகியை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகிறார்கள். வெளியூரில் இருந்து வருகிறவர்கள் ஈஷா பார்க்க வேண்டும் என்று வருகிறார்கள்.
குறிப்பாக எங்களுடைய ஹோட்டலில் பெரும்பாலும் வந்து தங்கி செல்பவர்கள் ஈஷாவிற்கு வருகிறவர்களாக இருக்கின்றனர். மேலும் விமானத்தில் நீங்கள் வெளிநாட்டினர் யாரையாவது பார்த்தால் அவர்கள் ஈஷாவிற்கு வருகிறவர்களாக தான் இருப்பார்கள். இது எல்லாம் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. சில நேரங்களில் அருகில் இருப்பதால் அதன் அருமை தெரியாமல் போகும்.
சத்குரு உலகம் முழுவதும் சுற்றினாலும் அவர் இருப்பது கோயம்புத்தூர், இதை விட கோவை மக்களுக்கு வேறென்ன ஆசீர்வாதம் இருக்க முடியும். கோவையில் சத்குரு அவர்கள் அடிக்கடி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவரைப் போன்ற குரு எங்களுக்கு தேவை" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் வழக்கறிஞர் சுமதி மற்றும் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கர்மா தமிழ் புத்தகம் குறித்து சிறப்புரை வழங்கினர். சுவாரஸ்யமான கருத்துக்களோடு புத்தகம் குறித்து இவர்கள் ஆற்றிய சிறப்புரையை விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஈஷா தன்னார்வலர்களும், பொது மக்களும் மிகவும் ரசித்து கேட்டனர்.
"கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புத்தக வாசிப்பாளர்களால் ஆங்கில புத்தகத்திற்கு சர்வதேச அளவில் 4.7 ரேட்டிங்கும் (மதிப்பீடு), 15,000-க்கும் அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டு உள்ளது. இப்புத்தகம் 'NewYork Best Seller" லிஸ்ட்டில் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 25-க்கும் அதிகமான உலக மொழிகளில் இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு உரிமம் கையெழுத்தாகி உள்ளது.
உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது வாசகர்கள், தமிழ் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.