S.P. Velumani: 'டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்’ - எஸ்.பி. வேலுமணி கோரிக்கை
”சிபிஐ தலையிட்டு இதில் உள்ள உண்மையை வெளிப்படுத்த வேண்டும். அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.”
கோவை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இனைந்தனர். இதனைத்தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சாரை சாரையாக யாரும் மாற்றுக் கட்சியில் சேர்வதில்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றதில் இருத்து அனைவரும் அதிமுகவில் தான் சேருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை கடந்த அதிமுக ஆட்சியில் செய்தோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த திட்டமும் திமுக அரசு செய்யவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவை மக்களை பாதித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு முதல்வராக வர வேண்டும் என அனைத்து மக்களும் நினைக்கின்றனர். அதனால் தான் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் இளைஞர்களும் அதிமுகவில் இணைகின்றனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு உடனடியாக ஐந்து பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும். கல்லூரி நிர்வாகமும் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விதிமுறைக்கு உட்பட்டு இதுபோன்று கட்டிடங்கள் கட்டப்படுகிறதா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் காவல்துறை பெண் காவலர் துன்புறுத்தபட்டார். காவல் துறையில் தொடர்ந்து தற்கொலைகள் நடக்கிறது. காவல் துறையினருக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.
டிஐஜி மன உளைச்சலில் இருந்தார் என்றால், அவரை கூப்பிட்டு விடுப்பு அளித்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு பல அழுத்தங்களை கொடுத்திருப்பதாக சொல்கின்றனர். நல்ல காவல்துறை அதிகாரியை இழந்திருக்கிறோம் என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். சிபிஐ தலையிட்டு இதில் உள்ள உண்மையை வெளிப்படுத்த வேண்டும். அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். டிஐஜி மரணம் தொடர்பாக முரண்பாடான தகவல்கள் இருப்பதால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக ஊழல்கள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை. பாஜகவின் அடிமை என அதிமுகவை பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் காவிரி பிரச்சனை வந்தபோது 23 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது அதிமுக. பொது பிரச்சனை என வரும் பொழுது மக்கள் பக்கம் நிற்கின்றோம். தற்போது திமுகவை எதிர்த்து யாரும் பேசுவதில்லை. ஆனால் திமுக மோசமான ஆட்சி என மக்கள் முடிவு செய்து விட்ட சூழலில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்பொழுது நடந்தாலும் அதிமுக வெற்றி பெறும். வைகோ, திருமாளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் இப்போது பேசுவதே இல்லை. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்கள் திமுக என்ன செய்தாலும் அடிமையாக ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கின்றனர். பொது பிரச்சினைகளுக்குத் திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/