மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் உள்ள தீர்த்தமலையை சுற்றுலாதலமாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை
தமிழ் பண்பாட்டின் அடையாளமாக விளங்கி வரும் அரூர் அடுத்த தீர்த்தமலையை சுற்றுலா தலமாக்க, நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் பலராலும் அறியப்பட்ட சுற்றுலா தலமாக ஒகேனக்கல் உள்ளது. ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான வரலாற்றுச் சின்னமாய் விளங்கும் புகழ்பெற்ற புண்ணிய தலமாய் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் விளங்குகிறது. தமிழ் பண்பாட்டு சின்னமாகவும், புனிதமும், இயற்கை அழகும் நிறையப் பெற்ற இத்தலம் தீர்த்தமலை, அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலமாகும். சுமார் 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது தீர்த்தகிரீஸ்வரர் கோயில்.
சிவனை மதிக்காமல் பார்வதியின் தகப்பனார், தக்சன் நடத்திய யாகத்திற்கு விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் அழைத்துள்ளார். ஆனால் சிவனை மட்டும் அழைக்கவில்லை. அப்போது தன்னை மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத்திற்கு அனைத்து தேவர்களும் சென்றதால், கோபமடைந்த சிவன் அவர்கள் கண்களுக்கு புலப்படாமல் இருக்கவே இந்த மலையில் வந்து தவம் மேற்கொண்டதாக இக்கோயிலின் ஸ்தல வரலாறு கூறுகிறது.
தீர்த்தமலை ஒரு திசையில் இருந்து பார்க்கும்போது ஜடாமுடிகளுடன் கூடிய சிவபெருமானின் சிரம் போலவும், வடதிசையில் மூன்று சடைகளும், தென்திசையில் 4 சடைகளும் தோன்றும். அதன் நடுவே நிறைமதி வடிவாகி, கோமகன் போல் வலது புறத்தில் லிங்க வடிவமாக விளங்கித் தோன்றும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தீர்த்தமலையில் ராம தீர்த்தம், கௌரி தீர்த்தம், குமார தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், அக்னி தீர்த்தம் என 5 தீர்த்தங்கள் உள்ளது.
இதில் ராமன் வனவாசத்தில் இருந்த போது சீதை சிறை பிடிக்கப்பட்டாள். அப்போது அவரை மீட்கும் போரில், ராமனால் ராவணன் கொல்லப்படுகிறான். அப்போது ராமனுக்கு தோஷம் பற்றிக் கொள்கிறது. அந்த தோஷம் நீங்க வேண்டுமானால் தீர்த்தமலையில் உள்ள சிவனை வணங்க வேண்டும் என்று முனிவர்கள் கூறவே, ராமன் இங்கு வருகிறான். அங்கு அவர்கள் நீராடி தவம் புரிய தண்ணீர் இல்லை. அப்போது உடனே கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வர அனுமனை அனுப்பினார். ஆனால் அனுமன் வர தாமதமானதால், சீதாதேவி பஞ்சாட்சர மந்திரத்தை வேண்டினார். அந்த நேரத்தில் மலையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நீர் வர தொடங்கி கலசங்களை நிரப்பியது. அந்த நீரைக் கொண்டு, ராமன், சிவனை அபிஷேகம் செய்தார். அவ்வாறு ராமனுக்காக உருவாக்கப்பட்ட தீர்த்தம் தான் ராம தீர்த்தம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் பாவம், சனி தோஷம் நீங்க வேண்டி, இந்த தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு செல்கின்றனர்.
இப்படியான இடத்தில் புனித நீராடிவிட்டு, சாமி தரிசனம் செய்ய விஷேச நாட்களை தவிர, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த திருத்தலத்தை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனவே வருகிற நிதிநிலை அறிக்கையில், தீர்த்தமலையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் தருமபுரி மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion