டாஸ்மாக் மதுபானத்தில் தரம் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக் கொள்கிறார் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
சட்டமன்றத்தில் துரை முருகன் சரக்கில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயம் நோக்கி செல்கின்றார்கள் என்று மிக மோசமான பதிவை பதிய வைத்ததை வன்மையாக கண்டிக்கிறோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அமைச்சர் துரைமுருகனுக்கு கண்டனம்:
அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் 69 உயிர்களை இழந்திருக்கிறோம். நேற்று மூத்த அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசும் போது, சரக்கில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயம் நோக்கி செல்கின்றார்கள் என்று மிக மோசமான பதிவை பதிய வைத்ததை தேமுதிக சார்பாக நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். முதலமைச்சர் முன்பு மூத்த அமைச்சர் சட்டமன்றத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் கிக்கு என்கிறார். சரக்கு பற்றி பேசுகிறார், கிறுக்குத்தனமாக பேசுகிறார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மக்களின் உயிர் பணயம்:
கள்ளச்சாராயம் என்பது வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு முழுக்க டாஸ்மார்க் கடைகளை நடத்தி, ஆண்டு முழுவதும் 45 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். மக்கள் உயிரை பணயம் வைத்து இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகாரர்களாக மாற்றிய பெருமைதான் இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. பிறகு எதற்கு டாஸ்மாக் வைத்துள்ளீர்கள்? அதில் தரம் இல்லை என்பதை மூத்த அமைச்சர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். யார் கள்ளச்சாராயம் நோக்கி செல்ல வைக்கிறார்கள் என்பதை தெளிவாக தெரிகிறது. குடியை கொடுத்து கோடியை நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, கோடிக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்துள்ளீர்கள்.
அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்
கள்ளக்குறிச்சி மட்டுமல்லாமல் திருப்பூர், பொள்ளாச்சியில் ஒரு நிகழ்வு நடந்ததாக நான் கேள்விப்பட்டேன். இது இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் இருக்கிறது. பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாய் அடைத்து விடுகிறார்கள்.
எல்லா இடங்களிலும் காவல் நிலையம் வைக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு எப்படி டாஸ்மார்க் மட்டும் வைக்க முடியும்? போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா? என்ற மக்கள் கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம். கள்ளச்சாராயம் விவகாரத்தில் ஆளுநர் ரவியை சந்தித்து சிபிஐ வழக்காக மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கையை வைத்தோம்.
மதுவிலக்கு திருத்தச் சட்டம் உண்மையிலேயே கண்துடைப்பு நாடகம் தான். ஆளுங்கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. அந்த கல்வராயன் மலையில் இதற்கு முழு பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அவர் பதவி விலக வேண்டும். அப்போதுதான் இதை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும். மேலும் இதற்கு முழு பொறுப்பை அரசுதான் ஏற்க வேண்டும். இனி ஒரு மரணமும் நிகழக் கூடாது இது மிகவும் கண்டனத்திற்குரியது என்பதை நான் கூறிக் கொள்கிறேன். இதனை இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே தவிர அரசு ஆட்சியாளர்கள் காவல்துறை மக்கள் என அனைவரும் இணைந்தால் தான் இது சாத்தியமடையும்.
கள்ளுவிற்கு அனுமதி வழங்குக
கொங்கு மண்டல மக்கள், விவசாயிகள் என பல பேருடைய பல நாள் கோரிக்கையான கள்ளுக்கு அனுமதி என்பது, விஷ சாராயம், டாஸ்மார்க் கடையை விட நல்லது. கள் இறக்கி விற்பனை செய்வதால் அரசாங்கத்திற்கு எந்தவித வருமானமும் கிடையாது. அதனால் அதை ஊக்குவிக்க மாட்டேன் என்கின்றார்கள். மக்களின் உயிரை பயணம் வைத்து தான் இந்த அரசு நடக்கிறது.
போன முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவரும் அவரது மகனும் மதுவை ஒழிப்போம் என்று வீட்டு முன்பு நின்று கூறினார்கள். இப்போது ஏன் மதுவை ஒழிக்கவில்லை? இப்போது யார் ஆட்சி நடந்து கொண்டுள்ளது? இப்போது ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை? இதற்கு முழு பொறுப்பு ஏற்று முதல்வர் மக்களை சந்திக்க வேண்டும் அல்லவா?
மீண்டும் ஒரு எமர்ஜென்சி ஆட்சி:
கள்ளச்சாராயம் விவாகரத்தை சட்டமன்றத்தில் பேச அனுமதி இல்லை என்பதில் இருந்து, ஜனநாயகம் படுகொலைக்கு தள்ளப்பட்டுள்ளதை உணரலாம். மீண்டும் ஒரு எமர்ஜென்சி ஆட்சி போல தான் நடந்து கொண்டுள்ளது. அடுத்த தேர்தலை நோக்கி தான் இந்த ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் தவிர, அடுத்த தலைமுறையை யோசிக்கின்ற கட்சியாக திமுக இல்லை. 40 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி போன்ற பல்வேறு பணிகளை செய்து வருவது கேப்டன் தான் இன்றைக்கு விஜய் அவர்கள் செய்து வருகிறார் அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் இனி வரும் காலங்களில் அவருடைய செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.