கோவையில் அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி ; தள்ளுமுள்ளு.. ரசிகர்கள் காயம்.. நடந்தது இதுதான்..
காவல் துறையினருக்கும் ரசிகர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா தர்ஷனா திரையரங்கில் நள்ளிரவு 1 மணி காட்சியில் அஜித் ரசிகர்களுக்கு தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் பொங்கல் வெளியீடாக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதேபோல் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படமும் இன்று வெளியானது. வாரிசு படத்தின் முதல் காட்சி 4 மணிக்கு திரையிடப்பட்டது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்ளும் நேற்று மாலை முதலே தியேட்டர்களை ஆக்கிரமிக்க தொடங்கினர்.
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா தர்ஷனா திரையரங்கில் ஒரு மணி காட்சிக்கு நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கு அதிக அளவில் ரசிகர்கள் திரண்டதால் திரையரங்க வாயில் கதவை 11 மணி 30 மணி அளவில் உடைத்துக் கொண்டு ரசிகர்கள் உள்ளே புகுந்தனர். அவர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் தடுத்து நிறுத்திய போது, காவல் துறையினருக்கும் ரசிகர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இருப்பினும் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் இருந்ததால், நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு ரசிகர்கள் கண்ணாடி, கைபிடி இரும்பு அனைத்தும் உடைத்துக் கொண்டு தியேட்டருக்குள் புகுந்தனர்.
திரையரங்கம் நிரம்பி வழியும் அளவிற்கு ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் குவிந்திருந்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாதுகாப்பு பணிக்கு வந்த பாக்ஸர் ஒருவருக்கு கேட்டின் கம்பி தொடையில் ஏறி ரத்தம் வழிந்தது. உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காவல் துறையினர் இவர்களை கட்டுப்படுத்த முயன்றதால், பட்டாசு வெடித்து கவனத்தை திருப்பி அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்குள் நுழைந்தனர். பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஒரு மணி அளவில் அஜித்தின் துணிவு படம் வெளியானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்