சினிமா ஆசை; குளிர்பானத்தில் மயக்க மருந்து; பலமுறை உல்லாசம் - கல்லூரி மாணவிக்கு நடந்த பகீர் சம்பவங்கள்!
பொள்ளாச்சியில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தயாரிப்பாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தயாரிப்பாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், எனக்கு சிறு வயதில் இருந்து சினிமா துறையில் ஆர்வம் இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். அப்போது டிஎன் 41 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினேன். பார்த்திபன் என்ற தயாரிப்பாளர் பொள்ளாச்சியில் உள்ள விடுதியில் நடிகைகள் தேர்வு நடப்பதாக கூறினார்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் நான் அங்கு சென்றேன். அங்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு முக்கிய கதாபாத்திரமாக நடிப்பதற்கு என்னை தேர்வு செய்ததாக கூறி பேசி வந்தார். பின்னர் 22.12.2019 தேதி பார்த்திபன் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தார். அதனைக் குடித்ததும் மயக்கம் அடைந்தேன். சுய நினைவு இல்லாமல் இருந்த என்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார். மயக்கம் தெளிந்த பின்பு கேட்ட போது, பார்த்திபன் 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பின்னர் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டார். இதனால் கர்ப்பம் அடைந்த நிலையில் சில மாத்திரைகளை கொடுத்து கர்ப்பத்தை கலைத்தார்.
பின்னர் 20.11.2020 இணையதளம் வாயிலாக பதிவு திருமணம் செய்து கொண்டு கோவைப்புதூர் அறிவொளி நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் 15 மாதங்கள் பார்த்திபன் என்னோடு ஒன்றாக வாழ்ந்து வந்தார். பின்னர் என்னை விட்டு பிரிந்து சென்ற நிலையில், பார்த்திபன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி என்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபனை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
பார்த்திபன் ஒரு சாதிய அமைப்பில் மாநில இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார். மேலும் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்