’ஒரு மொழியை ஆட்சி மொழியாகத் திணித்தால் மற்ற மொழிகள் அழியும்’ - ப.சிதம்பரம்
”இந்தியாவில் ஒரு மொழி தான் என்றால், அதனைத் திணிக்க திணிக்க பிற மொழிகள் அழிந்துபோகும். தமிழ் மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்”
கோவை, காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலையரங்கில் வைரமுத்துவின் பிறந்தநாள் மற்றும் அவர் இலக்கியத் துறையில் நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக இலக்கிய பொன்விழா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.பி ப.சிதம்பரம், அமைச்சர் துரைமுருகன், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வைரமுத்துவுக்கு பாராட்டு விழா
இந்நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், ”21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகச் சிறந்த கலைஞன் கவிஞன் வைரமுத்து. வைரமுத்து கவி பாடுகின்ற காலத்தில் நாங்கள் வாழ்வதில் மகிழ்ச்சி. வைரமுத்து தான் இந்த நூற்றாண்டின் கவி. வைரமுத்து 17 வயதில் இருந்து புத்தகம் எழுதத் தொடங்கியவர். வடுகபட்டியில் இருந்து வாஷிங்டன் வரை புகழை பரப்பி இருக்கிறார்.
வடுகபட்டி தந்த தமிழ் குழந்தை கவிப் பேரரசாக உருவானதைக் கண்டு நான் பூரிப்படைகிறேன். வடுகப்பட்டி போன்ற கிராமம் தற்போது தமிழகத்தில் இல்லை. ஆனால் பீகார், உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. நான் எங்கு சென்றாலும் உணவு விலையை கேட்டறிவேன். ஏனெனில் உணவு விலை தான் பொருளாதாரத்தை தீர்மானிக்கும்.
இறக்கும் மொழிகள்
இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி இறந்து போய்க்கொண்டிருக்கிறது. கிரேக்க நாட்டு, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் பல்வேறு மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன.
மொழி என்பது மிகவும் முக்கியம். ஆட்சியில் இல்லாத மொழி அழிந்து போகும். இந்தியாவில் ஒரு மொழி தான் என்றால், அதனைத் திணிக்க திணிக்க பிற மொழிகள் அழிந்துபோகும். தமிழ் மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இன்னொரு மொழிக்கு இடம் தந்து விட கூடாது.
தமிழ் மொழி தான் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களை இணைக்கும். தமிழ் மொழி பொலிவுடன் இருக்கும் வரை உங்களை (வைரமுத்து) வாழ்த்தும். தமிழை வளர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு (வைரமுத்து) உள்ளது” எனத் தெரிவித்தார்.
துரைமுருகனை ஜெயித்த ப.சி
இதையடுத்து உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், ”தமிழ் இலக்கியத்தில் கோவை என்று ஒன்று உண்டு. எனவே தான் கோவையில் கோவை எடுத்திருக்கிறார்கள் போல. சிதம்பரம், நானும் கல்லூரியில் வெவ்வேறு அணியில் இருந்தோம். ஆமாம் நான் திமுக. அவர் காங்கிரஸ். கல்லூரி தேர்தலில் ஆங்கிலத்தில் பேசி என்னை 6 ஓட்டில் சிதம்பரம் ஜெயித்து விட்டார்.
வைரமுத்து கலைஞரிடம் பெரும் மதிப்பு பெற்றவர். வைரமுத்துவும் கலைஞரிடம் பெரும் மதிப்பு கொண்டவர். இவ்வுலகில் கற்பனை இல்லாத மனிதனே இருக்க மாட்டான். கவிதையில் எந்த அளவிற்கு வைரமுத்துவிற்கு ஜாலம் உள்ளதோ, அதை விட உரை நடை வீச்சு உள்ளது.
தமிழாற்றுப்படை நூல், இந்த உலகமே அழிந்து போய், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு உலகம் தோன்றி அகழ்வாராய்ச்சி செய்தாலும் இருக்கும். தமிழ் மொழி, தமிழரைப் பற்றி இந்த நூல் எடுத்துக் கூறும். இன்று வாழும் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் அனைத்தும் நீங்கள் தான்” என அவர் கூறினார்.
தேவா பேச்சு
பின்னர் உரையாற்றிய இசையமைப்பாளர் தேவா, ”கவிப்பேரரசு வைரமுத்து மிகவும் நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியது என்னுடைய பாக்கியம். ஒவ்வொரு தமிழர் விழாவுக்கும் வைரமுத்து எழுதி நான் இசைத்த பாடல்கள் தான் அதிகம் ஒலிக்கப்படுகின்றன.
மற்றவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பவர் வைரமுத்து. நான் இசை அமைக்க கம்போசிங் செய்வதற்கும் அவர் பாடல் எழுதுவதற்கும் 5 நிமிடம் தான் ஆகும். எந்தவொரு தலைக்கனமும் இல்லாத மனிதர் அவர். அவர் என்னுடைய பேரனுக்கும் பாடல் எழுத வேண்டும்” எனத் தெரிவித்தார்.