கோவையில் அதிகாலையில் பற்றி எரிந்த ஆம்னி பேருந்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நிலையில், பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நிலையில், பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
கோவையில் இருந்து சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல பிற மாவட்டங்களில் இருந்தும் கோவைக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து ஆகாஷ் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்து நேற்றிரவு கோவைக்கு கிளம்பியது.
30 பயணிகளுடன் வந்த அந்த பேருந்து கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.எம்.சி.ஹெச். என்ற தனியார் மருத்துவமனை அருகே வந்த போது திடீரென தீப்பற்றியது. உடனடியாக சுதாரித்த ஆம்னி பேருந்து ஓட்டுனர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டார். பயணிகள் அனைவரும் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நிலையில் தீ, ஆம்னி பேருந்து முழுவதும் பரவியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் பேருந்து முழுமையாக எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அனைத்தனர். அதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கோளாறு மற்றும் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.