(Source: ECI/ABP News/ABP Majha)
தோட்டத்தில் திருட வந்த வடமாநில இளைஞரை அடித்து கொன்று ஆற்றில் வீசிய 10 பேர் கைது
வீட்டின் கதவைத் தட்டி திருட முயற்சித்த நபரை பிடித்து அடித்து கட்டி வைத்துள்ளனர். ஆட்டோவில் ஏற்றிச் சென்று உடலை சித்திரை சாவடி நொய்யல் ஆற்றுப்பாலத்தில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.
கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள சித்திரைச்சாவடி பகுதியில் மணி (எ) காளியப்பன் (55) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்நிலையில் இவரது தோட்டத்தில் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத ஒரு நபர் வீட்டின் கதவைத் தட்டி திருட முயற்சித்தாக கூறப்படுகிறது. அந்த நபரை அவ்வீட்டில் இருந்த மணியின் மகன் விஸ்வநாதன் (30) மற்றும் மருமகன் சம்பத்குமார் (36) ஆகியோர் சேர்ந்து பிடித்து அடித்து கட்டி வைத்துள்ளனர். இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் ஆலாந்துறை காவல் துறையினர் சென்று பார்த்த போது, திருட முயற்சித்த நபரை கட்டி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த நபரிடம் விசாரித்த போது அந்நபர் குடிபோதையில் இருந்ததுடன், ஹிந்தியில் பேசிக் கொண்டும் இருந்துள்ளார். இதனால் அந்நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இயலாது என்று அவர்களிடம் கூறி, காலை 6 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜர் செய்யுமாறு காவல் துறையினர் கூறிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து காவல் துறையினர் மணியின் குடும்பத்தினரிடம் காலையில் விசாரித்த போது, காலை 5 மணிக்கு கட்டி வைத்திருந்த நபர் கயிறை அவிழ்த்து கொண்டு தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பூலுவபட்டியிலிருந்து தென்னமநல்லூர் செல்லும் சாலையில் உள்ள நொய்யல் ஆற்றுப் பாலத்தின் கீழ் தண்ணீருக்குள் அடையாளம் தெரியாத சுமார் 30 வயதுடைய ஆண் பிரேதம் கிடப்பதாக ஆலாந்துறை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரேதத்தின் பின் தலையில் முடி பிய்ந்த நிலையில் இரத்தக் காயமும், தலையில் மற்றொரு இரத்த காயமும் காணப்பட்டுள்ளது. இதையடுத்து காவல் துறையினர் அந்த உடலை உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆலாந்துறை காவல் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மணி தோட்டத்து வீட்டில் அத்துமீறி நுழைந்ததால் கட்டி வைக்கப்பட்டிருந்த நபர் தான் பாலத்தின் கீழ் இறந்த நபர் என்று தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மணி, அவரது மகன் விஸ்வநாதன் மற்றும் மருமகன் சம்பத்குமார் ஆகிய மூவரும் தோட்டத்திற்குள் நுழைந்த நபரை தாக்கி கட்டி வைத்ததும், பின்னர் அவர்களது உறவினர்களான கார்த்திகேயன், ஜெகநாதன், கணேஷ் துரைசாமி, பொன்னுசாமி, ஜோதி ராஜ் ஆகியோரும் தாக்கியுள்ளனர். மேலும் பயணிகள் ஆட்டோ ஓட்டுனரான பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சரவணக்குமார் என்பவரை மருத்துவமனை செல்ல வேண்டும் எனக்கூறி அழைத்துள்ளனர். சரவணக்குமார் வந்து பார்த்த போது கட்டி வைத்திருந்த நபர் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கவே, சோதித்து பார்த்ததில் இறந்து போனது தெரியவந்தது.
பின்னர் சம்பத்குமார் கூறிய யோசனையின் பேரில் அவரது ஆட்டோவில் ஏற்றிச் சென்று உடலை சித்திரை சாவடி நொய்யல் ஆற்றுப்பாலத்தில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருட வந்த நபரை அடித்து கொலை செய்து ஆற்றில் வீசிய 10 பேரையும் ஆலாந்துறை காவல் துறையினர் கைது செய்தனர். சந்தேகம் மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக காவல் துறையினர் மாற்றினர். மேலும் 10 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் 10 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.