நீலகிரியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு ; பொதுமக்கள் அச்சம்
பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னா கிராமத்தில் கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வப்போது வனவிலங்குகள் தாக்குவதால் பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னா கிராமத்தில் கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கடந்த மாதம் இயற்கை உபாதை கழிக்க சென்ற 3 பெண்கள் சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட்ட ரேவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்நிலையில் கூடலூர் அடுத்த கொலப்பள்ளி குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தும், அவர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவோ, அல்லது சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் சேரங்கோடு அடுத்துள்ள சேவியர்மட்டம் பகுதியில் வசந்தராஜ், வைதேகி ஆகியோரின் 4 வயது மகள் கிருத்திகா என்பவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுத்தை ஒன்று சிறுமியை தாக்க முயற்சித்துள்ளது. அப்போது மக்கள் எழுப்பிய சத்தத்தால் சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. இருப்பினும் இந்த சம்பவத்தில் சிறுமி கிருத்திகாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்து வரும் நிலையில், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் ஆறு கூண்டுகளை அமைத்துள்ளனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க இரண்டு வனக்கால்நடை மருத்துவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இன்று சிறுத்தை நடமாட்டம் உள்ள கிராமப் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சென்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நான்சி என்ற 3 வயது சிறுமியை திடீரென தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின் கண் முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. உடனே தாயின் அலறல் சத்தத்தை கேட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர். பின்பு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகன மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சிறுத்தையின் தாக்குதல் காரணமாக ஏற்கனவே ஒரு பழங்குடியின பெண் உயிரிழந்த நிலையில், இன்று இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள அச்சம் அடைந்துள்ளனர். சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் தொண்டியாலம் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.