'என்.ஐ.ஏ அதிகாரிகள் அரபிக் கல்லூரி குறித்து விசாரணை நடத்தினர்’ - விசாரணைக்குள்ளானவர்கள் பேட்டி
கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள திமுக கவுன்சிலர் முபசீரா வீட்டில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு பெற்றது. காலை 6 மணியிலிருந்து 3 மணி நேரமாக நடைப்பெற்ற சோதனை நிறைவு பெற்றது. பின்னர் திமுக கவுன்சிலர் முபஷீரா கணவர் ஆரிப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சனோஃபர் அலியின் காய்கறி கடை அருகே என் கடை உள்ளது. அதன் அடிப்படையில் என்னிடமும் விசாரணை செய்தனர். அரபிக் கல்லூரிக்கு சென்றீர்களா என விசாரித்தனர். நான் சென்றது இல்லை எனக் கூறினேன். 1.5 ஆண்டுகளாக தான் சனோஃபர் அலியை தெரியும். பக்கத்து கடை என்ற அடிப்படையில் விசாரித்து விட்டு கிளம்பினர். ஒரு சில இடங்களுக்கு சென்று வந்துள்ளீர்களா என கேட்டனர். 5 அதிகாரிகள் வந்து இருந்தனர். என்ன என்ன வியாபாரம் செய்தனர் என கேட்டனர். சனோபர் எப்படி தெரியும் என மட்டும் கேட்டனர். முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தேன். என்.ஐ.ஏ. அதிகாரிகள் அரபிக் கல்லூரிகள் குறித்து கேள்வி கேட்டனர். எனக்கும் அரபிக் கல்லூரிக்கும் சம்பந்தம் இல்லை. என் மனைவியிடம் எந்த விசாரணை நடத்தவில்லை” எனத் தெரிவித்தார்.
இதேபோல திமுக இளைஞரணி அமைப்பாளர் தமீம் என்பவரின் வீட்டில் நடந்த சோதனை நிறைவு பெற்றது. விசாரணைக்கு பின்னர் தமீம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அதிகாலை முதல் 8 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 2 செல்போன்களை வாங்கி சென்று உள்ளனர். அரபிக் வகுப்பிற்கு சென்று உள்ளீர்களா என கேட்டு விசாரித்தனர். எனது அம்மா வீட்டிற்கு அதிகாலையிலேயே வந்து சோதனை நடத்தினர். செல்போன் மூலம் அழைப்பு விடுத்து இங்கு வரவைத்தனர். எந்த குற்ற பின்னணிகளுக்கும் செல்வதில்லை. நாளை நேரில் ஆஜராக கூறி உள்ளனர். பி.ஆர்.எஸ். வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு நாளை வர சொல்லி உள்ளனர். நேரில் சென்று விளக்கம் அளிக்க உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இன்று காலை 6 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜமேஷா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் ஜமேஷா முபினுடன் படித்த சந்தேகப்படும் படியான 22 நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையில் திமுக பிரமுகர் தமிமுன் அன்சாரி, திமுகவை சேர்ந்த கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் முபசீரா, ஜி எம் நகரில் உள்ள அபுதாஹிர், குனியமுத்தூர் பகுதியில் உள்ள சோஹைல், கரும்புக்கடை பகுதியில் உள்ள மன்சூர் உள்ளிட்டவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.