NIA raid: 'அரபி மொழி வகுப்புகள் என்ற பெயரில் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற முயற்சி’ - என்.ஐ.ஏ. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
சோதனையில் மொபைல் போன்கள், சேப்டாப்கள், ஹார்டு டிஸ்க்கள், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், 60 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 18200 அமெரிக்க டாலர்கள், அரபு மொழி புத்தகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
கோவை உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் நாடு முழுவதும் 30 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஜி.எம். நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 22 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி 82 வது வார்டு கவுன்சிலர் முபசீராவின் கணவர் ஆரிப், திமுக இளைஞரணி அமைப்பாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் வீடுகளிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள், அவ்வமைப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம், ஆட்சேர்ப்பு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டது தொடர்பாக இன்று தென்னிந்தியாவில் மொத்தம் 31 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும், கடையநல்லூரில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. இதேபோல தெலுங்கானாவில் 5 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் மொபைல் போன்கள், சேப்டாப்கள், ஹார்டு டிஸ்க்கள், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், 60 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 18200 அமெரிக்க டாலர்கள், அரபு மொழி புத்தகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
அரபு மொழி வகுப்புகள் என்ற பெயரில் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கு வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய சமூக ஊடகங்களையும் பயன்படுத்தியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டவர்கள் தீவிரவாத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல். இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி நாட்டின் அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேசா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ், இலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள சிறையில் இருந்த அசாரூதின் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்ததால், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. இந்நிலையில் மீண்டும் தேசிய புலனாவு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.