திருப்பூரில் அதிகரிக்கும் கொரோனா: டாஸ்மாக் நேரம் குறைப்பு; புதிய கட்டுப்பாடுகள் அமல்!
தொற்றுப் பரவல் அதிகரிப்பால் கோவையை தொடர்ந்து, திருப்பூரிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் சற்று அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களில் அண்டை மாநிலம் மற்றும் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட தளர்வுகள் தவறாக பயன்படுத்தாமல் கண்காணித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப் படுத்த வேண்டுமென திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வீனித் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் வீனித் அமல்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகங்கள் தவிர்த்த மளிகை கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள 33 வணிகப் பகுதிகள் மற்றும் பல்லடம், தாராபுரம், உடுமலைப் பேட்டை ஆகிய நகராட்சிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறிக் கடைகள், உணவுப் பொருட்கள், இறைச்சி கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை மடும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சூப்பர் மார்கெட்டுகள், பன்னடுக்கு வணிக வளாகங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் சேராதவாறு ஒழுங்குபடுத்தி கண்காணிக்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் காவல் துறை உதவியுடன் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள – தமிழ்நாடு எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக திருப்பூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR சோதனை சான்றில் கொரோனா இல்லை சான்று அல்லது இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் சோதனைச்சாவடியில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நோய் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.