கோவை விமானப்படை பாலியல் வன்கொடுமை வழக்கு : தலைமை தளபதிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!
விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது, இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த கால பாலியல் வரலாறு பற்றி கேட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் தெரிவித்திருந்தார்.
கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னை லெப்டினல் அமித்தேஷ் ஹர்முக் என்ற விமானப் படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, 28 வயதான பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். விளையாட்டின் போது காயமடைந்த அவர், ஓய்வுக்காக தனது அறைக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதமாகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். மேலும் விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது, இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த கால பாலியல் வரலாறு பற்றி கேட்டதாகவும், விமானப் படை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் அமித்தேஷ் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் அமித்தேஷ் ஹர்முக் ஆஜர்படுத்தப்பட்ட போது, விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமித்தேஷ் தரப்பு வழக்கறிஞர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். கோவை காவல் துறையினர் பதில் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட நிலையில், நீதிமன்ற காவலில் லெப்டினன்ட் அமித்தேஷை உடுமலை கிளை சிறையில் காவல் துறையினரால் அடைக்கப்பட்டார்.
கடந்த 27 ம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இதனிடையே அமித்தேஷை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதேபோல அமித்தேஷ் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வருகின்ற 30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதனையடுத்து அமித்தேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து அமித்தேஷ் ஹர்முக் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விமானப்படை தலைமை தளபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்ய தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனை செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை உச்ச நீதிமன்ற உத்தரவிற்கும், தனி மனித உரிமைக்கும் எதிரானது எனக்கூறியுள்ள தேசிய மகளிர் ஆணையம், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.