
ABP Impact : நொய்யல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைப்பு - வாகன ஓட்டிகள் நிம்மதி
வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம், கனமமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது..

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை மாநகர பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நொய்யல் ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மேலும் நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்குவதும், போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம், கனமமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அச்சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் முறையான திட்டமிடல் இல்லாமல் தரைப்பாலம் அமைக்கப்பட்டதால், மூன்று முறை தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
மாற்றுப் பாதையான ஓண்டிபுதூர்- பட்டணம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையிலும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் போத்தனூர் சாலையும் சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 10 கி.மீ தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முறையான திட்டமிடல் இல்லாமல் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்படுவதாகவும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும், மீண்டும் சீரமைப்பதும் என தொடர்ந்து செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக ஏபிபி நாடு செய்தி வெளியிட்டது. அதன் ஏதிரொலியாக வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தரைப்பாலம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லாத வகையில் கான்கீர்ட் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். அதேசமயம் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி வருவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் உயர்மட்ட பாலத்தை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

