’தேர்தல் வாக்குறுதியின்படியே கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ - அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
”எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை என்பது அல்ல, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.”

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று சிகிச்சைக்கான படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் புதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி படுக்கைகளை பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். மேலும் ரோட்டரி கிளப் சார்பில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் கான்சண்டேட்டர் இயந்திரத்தையும் அவர் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது பேசிய அவர், “இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் 200 கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 28 படுகைகள் ஆக்ஸிஜன் செரிவூட்டிகளை கொண்டதாக உள்ளன. மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. அதன்படி கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது வேட்பு மனுவில் தங்களது சொத்து மதிப்பை முன்னாள் அமைச்சர்கள் காட்டினார். ஆனால் தற்போது 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதற்கு இடையே உள்ள வித்தியாசம் எப்படி வந்தது? எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை என்பது அல்ல, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் ஆலோசனை செய்கிறார். அதன்படி முடிவு வெளியாகும்” என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சமீரன் கூறுகையில், ”கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் 14,528 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயாராக இருக்கிறது. தற்போது வரை இதில் 13 விழுக்காடு படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது. கோவையில் தொற்று அதிகமாக உள்ள சாலைகள அல்லது வீடுகள் அதிகம் உள்ள 176 மைக்ரோ கண்டெயின்மெண்ட் ஜோன்கள் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோரில் தொற்று கண்டறியப்படுவோரின் சதவீதம் 19.7 ஆக உள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். எந்த சூழலையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

