பாஜக மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி - அமைச்சர் செந்தில் பாலாஜி
”பாஜக உலகத்தில் பெரிய கரகாட்ட கோஷ்டி. கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்ததை விட, கோமாளித்தனம் வேறு இல்லை.”
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று மாநகராட்சி சபை மற்றும் நகராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற மாநகராட்சி வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 846 பகுதிகளில் மக்கள் சபை நடந்து கொண்டிருக்கிறது. கிராம சபை போல நகர்ப்புற பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இக்கூட்டம் நடைபெறுகிறது. ஒரு வருடத்திற்கு 6 கூட்டங்கள் நடைபெறுகிறது. வார்டு குறைகளை எடுத்துச் சொல்லி தீர்வு காண வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க 200 கோடி கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் 211 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகள் நடந்துள்ளன. மக்களின் தேவை அறிந்து செயல்படுத்தும் முதலமைச்சராக நமது முதலமைச்சர் உள்ளார். அடித்தட்டு மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் துவங்கி மக்களின் வாழ்வை மேம்படுத்தி வருகிறார். ஆளுங்கட்சி எதிர்கட்சி வித்தியாசம் பார்க்காமல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் 10 கோரிக்கைகளை கேட்டு, நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். நாம் முதலமைச்சருக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி, நகராட்சி சபை கூட்டம் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சியில் 846 இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொது மக்களின் குறைகளை கோரிக்கையாக பெற்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் ஒன்றரை ஆண்டுகளில் பழுதடைந்த சாலை பணிகள் நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பழுதடைந்த சாலைகளும் சீரமைக்கப்படும். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தை பொருத்தவரை ஒன்றரை இலட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின்வாரியம் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்பதை பத்திரிகையாளர்கள் தவிர்த்திட வேண்டும். பாஜக உலகத்தில் பெரிய கரகாட்ட கோஷ்டி. கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்ததை விட, கோமாளித்தனம் வேறு இல்லை. முதலமைச்சர் நிகழ்ச்சி தொடர்பான செய்திகள் தொலைக்காட்சி செய்திகளில் தலைப்பு செய்தியில் இடம் பெறுவதில்லை. கோமாளியின் செய்திகள் முன்னிலை பெறுகிறது. அவர்களை போல ஆளுங்கட்சியினர் பத்திரிகையாளர்களை மிரட்டி உள்ளார்களா? பத்திரிகையாளர்கள் மீது அக்கறை கொண்ட முதலமைச்சர் பத்திரிகையாளர்களுக்கு ஒய்வூதியம் அறிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு” எனத் தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது என்ற அமைச்சர் கே.என்.நேருவின் கருத்து தொடர்பான கேள்விக்கு, “அது அவருடைய கருத்து. அது தொடர்பாக அவரிடம் தான் கேட்க வேண்டும்” என பதிலளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்