’ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்’ - அமைச்சர் சக்கரபாணி
”வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் கைரேகை வைத்து ரேசன் பொருட்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. அவர்களுக்காக கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் முன்னோட்டமாக துவக்கப்பட்டுள்ளது.”
கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள நியாய விலைக்கடையில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19 ஆயிரம் குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி, முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும். இதனை முதலமைச்சர் நாளை மறுதினம் சென்னையில் துவக்கி வைக்க உள்ளார். 9 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை 4 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும். இந்த நாட்களில் வாங்க முடியாதவர்களுக்கு 13 ம் தேதியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 11 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1404 நியாய விலை கடைகள் மூலம் பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படும். பொங்கல் பரிசு பொருட்கள் நூறு சதவீதம் பொருட்கள் வந்துள்ளது. கரும்பு 90 சதவீதம் வந்துள்ளது. முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் புரதச் சத்தும் வழங்க வேண்டும் என சிறப்பு பொது விநியோக திட்டம் துவங்கப்பட்டு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மைதா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அதில் இரண்டு பொருட்களை கடந்த ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள்.
ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பல மாவட்டங்களிலும் தேங்காய் விலை குறைவாக உள்ளதால், ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும்.
டாக்டர் ராமதாஸ் அரசு கரும்பு கொள்முதல் செய்வதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். குறைந்தது 5 அடி இருக்க வேண்டும் என சொன்னார். 6 அடி என சொல்லவில்லை. திமுக ஆட்சியில் முழு கரும்பு கொடுக்கிறோம். அதிமுக ஆட்சியில் முழு கரும்பு கொடுத்தார்களா? சிறு சிறு துண்டுகளாக தான் கொடுத்தார்கள். வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் கைரேகை வைத்து ரேசன் பொருட்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. அவர்களுக்காக கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் முன்னோட்டமாக சேப்பாக்கம், பெரம்பலூர் ஆகிய இரண்டு இடங்களில் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு கைரேகை, கருவிழி பதிவு ஆகியவை மூலம் ரேசன் பொருட்கள் கொடுப்பது அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த முரளி என்ற நபர் ரேசன் கடையில் பழைய அரிசி வழங்கப்படுவதாக அமைச்சர் சக்கரபாணியிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்த அமைச்சர் சக்கரபாணி, அக்கடையில் வழங்கப்படும் அரிசி காட்டச் செய்து, நல்ல அரிசி மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்