Local Body Election | உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது
"தேர்தலை முறையாக நடத்தும் பொறுப்புள்ள மாநில தேர்தல் ஆணையமே முறைகேட்டிற்கு துணை நிற்கிறது. பறக்கும்படை அப்பாவி மக்களின் வாகனங்களை சோதனை போட்டுவிட்டு, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது பறந்து போய்விட்டது"
![Local Body Election | உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது Marumalarchi makkal iyyam which was involved in the struggle to stop the urban local elections Local Body Election | உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/16/c0a9d56829d3fc6690d7628d88ddab55_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வருகின்ற 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும், ஓட்டுக்கு பணம், பொருள் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் அவ்வமைப்பினர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறும் போது, ”நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் தற்போது ஓட்டுக்கு பணம், பொருள் கொடுப்பது வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் என்பதால் இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ள கூட அனுமதி தரவில்லை. நீதிமன்றம் சென்று அதற்கான உத்தரவை பெற்று வந்ததற்கு பின்பும் அனுமதி கடிதம் கொடுக்க காலதாமதம் செய்து வருகின்றனர். காலநீட்டிப்பு செய்து கொடுத்தால் அதற்குள் தேர்தல் பிரச்சார நேரம் முடிந்துவிடும் என்பதால் இவர்களால் பிரச்சாரம் செய்யவே வாய்ப்பில்லை என நினைக்கின்றனர்.
ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் பறிபோவதைப் பற்றி பேசக்கூட இயலாத நிலை உள்ளது என்பது மிகவும் வேதனையானதாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இப்படி ஒரு நிலை இருந்ததில்லை. தேர்தலை முறையாக நடத்தும் பொறுப்புள்ள மாநில தேர்தல் ஆணையமே முறைகேட்டிற்கு துணை நிற்கிறது. அவர்களால் அமைக்கப்பட்ட பறக்கும்படை அப்பாவி மக்களின் வாகனங்களை சோதனை போட்டுவிட்டு தற்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது பறந்து போய்விட்டது. ஓட்டுக்கு பணம்,பொருள் கொடுப்பது தீவிரமாக,முழுமையாக,வெளிப்படையாக நடைபெற்று வருவதால் இந்த தேர்தல் ஒரு சதவீதம் கூட நியாயமான தேர்தல் அல்ல. ஏலம் விடுவதைவிட மிக மோசமான தேர்தலாகத் தான் இந்த தேர்தல் உள்ளது. அதனால் இந்த உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். ஓட்டுக்கு பணம், பொருள் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான முறைகேடுகளை விசாரிக்க அரசு தலையீடு இல்லாத நீதிபதி தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல் துறை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில், ‘ஓட்டுக்கு பணம் தர மாட்டேன்’ பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் நடத்தியது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)