சுதந்திர தின விழா ஜனாதிபதி விருந்தில் பங்கேற்கும் மரம் யோகநாதன் - எதற்காக தெரியுமா?
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றி கொண்டே, கடந்த 37 ஆண்டுகளாக மரங்களை பாதுகாக்கும் பெரும் பணியை செய்து வருகிறார்.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் யோகநாதன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் மரங்கள் மீது கொண்ட தீராக்காதலால், தனது பணிக்கு நிகரான நேரத்தையும், தனது ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரங்கள் வளர்ப்பிற்கு செலவிட்டு வருகிறார். கடந்த 37 ஆண்டுகளாக மரங்களை பாதுகாக்கும் பெரும் பணியை செய்து வருகிறார். இவர் பொது இடங்கள், அரசுப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நடவு செய்ததோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்தும் வருகிறார். விதை நேர்த்தி, மரம் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல், அரிய வகை அழிந்து வரும் மரங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளை யோகநாதன் தொடர்ந்து செய்து வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
விருதுகள்
மகாகவி பாரதியாரியரின் மிகப்பெரிய கனவான ’குயில் தோப்பு’ என்பதை காட்சியாக உருவாக்கும் வகையில்,அந்தப் பாடலில் உள்ள சவுக்கு, மா, தென்னை, பனை, வேங்கை உள்ளிட்ட அனைத்து மரங்களும் நடவு செய்யப்பட்டு, இக்கால சமுதாயத்தினர் பாரதியாரை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பாரதியார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயல்பட்டார். இவரது பணிகளை பாராட்டி யோகநாதனுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டில் ’பசுமை போராளி’ விருதினை, அப்போதைய துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி வழங்கி கெளரவித்தார். மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது, பெரியார் விருது, டிம்பர் லேண்டின் மர மனிதன் விருது, மத்திய நீர்வளத்துறை காலநிலை போர்வீரர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 2015ல் சிபிஎஸ்சி ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இவரைப்பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஜனாதிபதி விருந்து
இந்த நிலையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று சமூக பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு டெல்லியில் நாளை ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் 'AT HOME RECEPTION' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பல்வேறு நபர்களுக்கு விருந்து அளிக்க உள்ளார். அதில் பங்கேற்க மரம் யோகநாதனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பசுமைப்புரட்சியில் சாதனை செய்து வருவதை பாராட்டும் வகையில் யோகநாதனை குடியரசு தலைவர் நேரில் அழைத்து கெளரவபடுத்த உள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள யோகநாதன் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதுடன், குடியரசு தலைவர் அளிக்கும் விருந்திலும் பங்கேற்க உள்ளார். குடியரசு தலைவரால் கெளரவிக்கப்படும் யோகநாதனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.