Crime : அண்ணாமலைக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஆபாசமாக பேசிய நபர் கைது
அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து ஆபாசமாக பேசி முகநூலில் பதிவிட்ட நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து ஆபாசமாக பேசி முகநூலில் பதிவிட்ட நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை சுந்தராபுரம் சங்கம் வீதியை சேர்ந்தவர் முகுந்தன். இவர் பாஜக சுந்தராபுரம் பகுதி மண்டலத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் முகுந்தன் முகநூலை பார்த்துக் கொண்டிருந்த போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தாயாரைப் பற்றி ஆபாசமாக கோவையை சேர்ந்த ரமேஷ் என்ற நபர் பதிவிட்டு இருந்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஆபாசமாகவும், இழிவாகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் ரமேஷ் பேசியிருந்தார். இதனைப் பார்த்த முகுந்தன் அண்ணாமலையை இழிவாக பேசிய ரமேஷ் என்ற நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போத்தனூர் காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்டோருடன் வந்து புகார் மனு அளித்தார்.
முகநூலில் ரமேஷ் என்ற நபர் பேசிய வீடியோவையும் காவல் துறையினரிடம் பாஜகவினர் ஒப்படைத்தனர். அப்போது ரமேஷ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் எனவும் பாஜகவினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக சுந்தராபுரம் பகுதி மண்டலத் தலைவர் முகுந்தன் அளித்த புகாரின் பேரில், போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் (53) என்ற நபர் அண்ணாமலையை ஆபாசமாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதும், அவர் தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரமேஷ் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசுதல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல், பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்