சவுக்கு சங்கர் கையில் இரண்டு இடங்களில் முறிவு - வழக்கறிஞர் பரபரப்பு புகார்
சவுக்கு சங்கர் கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கையில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக வழக்கறிஞர் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
![சவுக்கு சங்கர் கையில் இரண்டு இடங்களில் முறிவு - வழக்கறிஞர் பரபரப்பு புகார் Lawyer complains that Savukku Shankar's hand is broken in two places சவுக்கு சங்கர் கையில் இரண்டு இடங்களில் முறிவு - வழக்கறிஞர் பரபரப்பு புகார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/7179c733eb27344b145455eccd563f031715307235783333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை நீதிமன்ற வளாகத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கையில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போட்டுள்ளனர். சிகிச்சைக்கு பின்பு தான் மன அழுத்ததில் இருந்து வெளியே வந்துள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார். இப்போது சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுப்பதாக மனு அளித்த இருந்த நிலையில், அதை பின் வாங்கி உள்ளனர்.
திங்கள்கிழமை கட்டு மாற்ற மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வர வேண்டும். அதே போன்று கஷ்டடி மனு தொடர்பாக திங்கள்கிழமை சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளனர். 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சவுக்கு சங்கருக்கு போராடி சிகிச்சை பெற்று உள்ளோம். வலது கையில் தான் சிறைக்கு சென்ற பின்பு தான் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேனியில் அதிகாலை 1.30 மணிக்கு சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். ஆனால், காலை 8 மணிக்கு மேல் தான் கஞ்சா வைத்திருந்தாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ரொம்ப மெனக்கிட்டு கஞ்சா வழக்கு போலீசார் போட்டுள்ளனர். ஆனால் கஞ்சா வழக்கு பொய் வழக்கு என நிருப்பிக முடியும் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களை அவர் வைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
சவுக்கு சங்கர் மீதான வழக்குகள்
பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அங்கு வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த வழக்கிலும் கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த வீரலட்சுமி ஆகியோர் சென்னை காவல் துறையினரிடம் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படயில் வழக்குப்பதிவு செய்த சென்னை காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இதற்கான உத்தரவினை சென்னை காவல் துறையினர் சவுக்கு சங்கரிடம் வழங்கினர். இதுவரை ஐந்து வழக்குகளில் யூ டியுபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)