கோவையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.. போக்குவரத்து நெரிசல்.. போலீசார் தடியடி
காவல் துறையினர் பொது மக்களை கலைந்து செல்ல கூறியும் கேட்காததால், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஆங்கில புத்தாண்டு தினத்தை நள்ளிரவில் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். கோவை வாலாங்குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் தனியார் அமைப்புகளுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இதனைக் காண ஏராளமான மக்கள் வாலாங்குளம் பகுதியில் திரண்டனர். இதற்காக அப்பகுதி முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அப்போது நடத்தப்பட்ட லேசர் ஷோ நிகழ்ச்சி மற்றும் ட்ரோன் ஷோ நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. புத்தாண்டை பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடனும் பொதுமக்கள் வரவேற்றனர்.
கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டை முன்னிட்டு லேசர் ஷோ மற்றும் ட்ரோன் ஷோ ஆகியவை நடத்தப்பட்டது. இவற்றை காண 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாலாங்குளத்தில் குவிந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாலையில் தங்கள் வாகனங்களுடன் திரண்டனர். வாலாங்குளத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு வரும் சாலையில் பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து காவல் துறையினர் திணறினா்.
இரவு 2 மணி வரை இந்த போக்குவரத்து நெரிசல் இருந்தது. இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களும், அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை அழைத்து வர வெளியேறிய ஆம்புலன்ஸ் வாகனங்களும் கடும் நெரிசலில் சிக்கி தவித்தன. நோயாளிகளுடன் சிக்கித்தவித்த ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்களே வழி ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர். காவலர்கள் பணியில் இருந்தும் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நீண்ட நேரம் நிலவியது.
இந்த நிலையில் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹோட்டல்கள் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளுகளுக்கு பெயர் பெற்றவை உள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பிரியாணி கடைகளில் கூட்டம் அளவிற்கு அதிகமாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையினர் அங்கு கூடியிருந்த கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இருந்தபோதும் கலைந்து செல்ல மறுத்து பிரியாணி சாப்பிடுவதற்காக அங்கே ஏராளமானோர் நின்றிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த உதவி ஆணையாளர் மற்றும் காவல் துறையினர் பொது மக்களை கலைந்து செல்ல கூறியும் கேட்காததால், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.