நீலகிரி பக்கம் கவனமா ட்ராவல் பண்ணுங்க! மழையால் ஆங்காங்கே மண் சரிவு! விவரம்!!
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கல்லட்டி மலைப் பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை மாநகர பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் அதிகபட்சமாக சின்கோனா பகுதியில் 4 செ.மீ. மழையும், வால்பாறை பிஏபி பகுதியில் 3.1 செ.மீ. மழையும், சின்னக்கல்லார் பகுதியில் 3 செ.மீ. மழையும், வால்பாறை தாலுக்காவில் 2.9. செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களான தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தலைகுந்தா, எச்.பி.எஃப், பாலடா, கல்லட்டி மலைப்பாதை, நடுவட்டம் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பைக்கரா அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கல்லட்டி மலைத் தொடர்களில் ஆங்கே நீர்வீழ்ச்சி ஏற்பட்டு மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனிடையே கனமழை காரணமாக உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 36 கொண்டை ஊசி வளைவு கொண்ட மலைப் பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகளும், மரங்களும் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மாநில நெடுஞ்சாலை துறையினர் கொட்டும் மழையில் சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருவதால் உதகையில் கடும் குளிர் நிலவி வருகிறது. தொடர் மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்