தமிழ் கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகாரில் திடீர் திருப்பம் - விசாரணை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!
"கல்லூரி முதல்வர் பதவிற்கான போட்டியில் இருந்து திருநாவுக்கரசை விலக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை தூண்டிவிடும் விதத்தில் பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது."
கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் தமிழ்க்கல்லூரி என அழைக்கப்படும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் தமிழ்த்துறையில் முனைவர் திருநாவுக்கரசு என்பவர் இணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அந்தக் கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறி ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் இணைப் பேராசிரியர் திருநாவுக்கரசு மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு இரவு நேரத்தில் டெலிகிராம் செயலியில் ஆபாசமாக பேசிய உரையாடல்கள் குறித்த ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் வெளியாகின.
அதில் மாணவியிடம் திருநாவுக்கரசு "வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்? பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, நீயும் நானும் இனி ரொம்ப க்ளோஸ், நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும், சமைக்க பழகிக்கோ, தனியா இருக்க போர் அடிக்கலயா, நைட்டுக்கு நான் வரவா, வீட்ல அம்மா இருக்காங்க இல்லாதப்போ சொல்றன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது நெறயா பண்ணலாம்.” என பேசியதாக பதிவுகள் இருந்தன. மேலும், திருநாவுக்கரசு அந்த மாணவிக்கு சட்டையைக் கழற்றி விட்டு உள்பனியனுடன் கட்டிலில் சாய்ந்த படி செல்பீ எடுத்து அனுப்பியுள்ளார். பிறகு இதே போல ‘நீயும் போட்டோ எடுத்து அனுப்பு’ எனக் கூறியதாகவும் கூறப்பட்டது.
இந்த புகார் குறித்து அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கேட்டதற்கு, திருநாவுக்கரசு அதை ஒப்புக்கொள்ளும் வீடியோவும் வெளியாகியது. இதையடுத்து மாணவி ஒருவரிடம் இரவு நேரத்தில் பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்தது தொடர்பாக முன்னாள் மாணவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், இணைப்பேராசிரியர் திருநாவுக்கரசு பணியிடை நீக்கம் செய்து அக்கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இது குறித்து அக்கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ’குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகவும், இது தொடர்பாக திருநாவுக்கரசு அளித்த விளக்கம் திருப்திகரமாக இருக்கவில்லை. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது.
இந்நிலையில் பேராசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய விசாரணை குழு அளித்த அறிக்கையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில், ”புகார் அளித்த மாணவர் கொடுத்த வீடியோ பதிவுகள் ஒன்றேகால் மணி நேரம் இருப்பதாகவும், புகார் அளித்த மாணவரிடம் விசாரித்த போது மூன்று மணி நேரத்திற்கும் மேல் வீடியோ இருப்பதாக தெரிவித்தார். ஆனால் முழுமையான வீடியோவை புகார் அளித்த மாணவர் கொடுக்கவில்லை. அதனால் அது குறித்து முடிவுக்கு வர முடியவில்லை. கல்லூரி முதல்வர் பதவிற்கான போட்டியில் இருந்து திருநாவுக்கரசை விலக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை தூண்டிவிடும் விதத்தில் பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது.
பேராசிரியர் திருநாவுக்கரசு பதட்டத்தில் தான் அந்த வீடியோவில் ஒப்புக்கொண்டார். சம்மந்தப்பட்ட மாணவியிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது, அந்த ஸ்கிரின் ஷாட் தன்னுடையது அல்ல என்றார். பேராசிரியர் தனக்கு எந்த தொந்தரவும் அளிக்கவில்லை என மாணவி விசாரணையில் தெரிவித்தார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.