கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 4 இடங்களில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை
வருமான வரித்துறை அதிகாரிகள் சீலை அகற்றி ஆவணங்களை சரிபார்த்தனர். சீலை அகற்றுவதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பிற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர்.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 7 இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் கடந்த முறை சோதனை நடத்திய போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், தொழிலதிபருமான கோல்ட் வின்ஸ் பகுதியைச் சேர்ந்த செந்தில் கார்த்திகேயனின் அலுவலகத்தின் ஒரு பகுதி சீல் வைக்கப்பட்டது. இதே போல பந்தய சாலை பகுதியில் உள்ள அரவிந்த் என்பவரின் இல்லம், பீளமேடு ரங்கநாயகி நகரில் உள்ள ஒரு வீடு ஆகியவைகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று பிற்பகலில் மீண்டும் இந்த இடங்களுக்கு வந்து சீலை அகற்றினர். பின்னர் இந்த மூன்று இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களையும் சரிபார்த்தனர். சீலை அகற்றுவதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பிற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர். சீல் அகற்றப்பட்ட பின்னரும் வீடுகளில் இருந்த சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சரி பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிதாக கட்டி வரும் வீட்டை கோவையைச் சேர்ந்த அருண் அசோசியேட் என்ற நிறுவனம் கட்டி வருகிறது. இந்நிலையில் கோவை திருச்சி சாலையில் நாடார் காலனியில் உள்ள அருண் அசோசியேட் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் பிரசாத் என்பவரிடமும் கரூரில் மேற்கொள்ளப்படும், கட்டுமான பணிகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல கோவை காந்திபுரத்தில் இருக்கும் கிஸ்கால் இரும்பு கம்பி அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கிஸ்கால் இரும்பு கம்பி உரிமையாளர் கண்ணப்பன் திமுகவை சேர்ந்தவர். அக்கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகன் திருமலைராஜ் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். கட்டுமான பொருட்கள் வழங்கப்பட்டது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காததால் கிஸ்கால் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்