மேலும் அறிய
Tamil News: சசிகலா உறவினரிடம் விசாரணை... ஜெயராமன் மீது வழக்கு... உறைபணி... இன்னும் பல கோவை செய்திகள்!
கோடநாடு வழக்கில் சசிகலா உறவினரிடம் விசாரணை, பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்கு, உதகையை உறைய வைக்கும் உறைபனி, மீண்டும் துவங்கிய மலை இரயில் சேவை உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...
- கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம், நீலகிரி தனிப்படை காவல் துறையினர் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதுவரை 81 பேரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முதல் முறையாக சசிகலாவின் உறவினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். கோடநாடு எஸ்டேட் குறித்து நன்கு அறிந்தவர் என்ற முறையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
- கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த ஆயுதப்படை சிறப்பு ஆய்வாளர் செல்வராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 40 பேர் மீது கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குளம் நிரம்ப யார் காரணம் என்பதில் மோதல் ஏற்பட்ட நிலையில், பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- கோவையில் உள்ள பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் காளிராஜை கண்டித்து, ஹெச்.ராஜா தலைமையில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் அப்பல்கலைகழகம் முன்பாக போராட்டம் நடத்தினர். பெண் உரிமை என்ற பெயரில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சு.ப.வீரபாண்டியன் தலைமையில் நடந்த கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்திய ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்தால், குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. கடந்த 3 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேயிலை மற்றும் காய்கறி செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே 60 நாட்களுக்கு பிறகு நீலகிரி மலை இரயில் சேவை துவங்கியுள்ளது. தொடர் மழை மற்றும் மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை இரயில் சேவை இரத்து செய்யப்பட்டு இருந்தது.
- மேட்டூர் அணையின் நீர் வரத்து 5,600 கன அடியில் இருந்து 4,600 கன அடியாக சரிந்து உள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது.
- சேலத்தில் பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மந்திரவாதி வேடத்தில் வந்த திருடனின் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தருமபுரி மாவட்டத்தில் ஈவ்டீசிங்கை தடுக்க, சாதாரணமாக பெண் காவலர்கள் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது ஈவ்டீசிங்கில் ஈடுபட்ட 45 பேர் சிக்கினர்.
- மொரப்பூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மொரப்பூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்தனர். அவதூறாக பேசியதாக கூறி நாம் தமிழர் கட்சியினரை திமுகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion