கோவையில் அரசுப் பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் பரபரப்பு: அதிகாரிகள் ஆய்வு
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேருக்கு காலையில் திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து மேலும் ஏழு மாணவிகளுக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
கோவை ராமநாதபுரம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000 மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேருக்கு காலையில் திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து மேலும் ஏழு மாணவிகளுக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனை அடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு, மாணவிகள் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்து விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் , மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக பள்ளியில் மூன்று மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளியில் இருந்த அனைத்து மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மாணவிகளுக்கு மயக்கம், உடல் சோர்வு காய்ச்சல் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட ஒரே உணவை பகிர்ந்து கொண்டதனாலா, அல்லது ஒரே குடிநீரை பருகினரா என்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9 மாணவிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டது தொடர்பான செய்தி வெளியானதை அடுத்து பெற்றோர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு தற்போது, குழந்தைகள் மத்தியில் ஃப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் அதிகமாக பரவ ஆரம்பித்துள்ளது. திடீர் வெயில், திடீர் மழை என சீதோஷ்ண நிலை மாறி வருவதால் இந்த வைரஸ் காய்ச்சலின் வேகம் அதிகரித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1166 ஆக அதிகரித்துள்ளது. இதனால் காய்ச்சல் பரவவதை தடுக்கும் வகையில் நாளை தமிழகம் முழுவதும் 1000 காய்ச்சல் முகாம்களை நடத்த சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கு வைரஸால் காய்ச்சல், உடல் வலி, தலை வலி, சளி, இருமல் போன்றவை இன்புளுயன்ஸா அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால், பெற்றோர்கள் அவர்களைப் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. ஏனெனில் இருமல், தும்மல் மூலம் வெளியாகும் நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது. அதேபோல ஆசிரியர்கள் பள்ளிகளில் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், உடனடியாக வீடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.
* நிறைய நீராகாரங்களைக் கொடுக்க வேண்டும்.
* தண்ணீரை அதிகம் எடுத்துக்கொள்ள வைக்க வேண்டும்.
* தொடர்ச்சியாக பாராசிட்டமாலைக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது. ஏனெனில் பாராசிட்டமால், கல்லீரலைப் பாதிக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
தடுப்பது எப்படி?
* கொரோனா காலத்தில் நாம் பின்பற்றிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீண்டும் தொடர வேண்டும். குறிப்பாக,
* முகக்கவசம் அணிவது,
* வெளியே சென்றுவிட்டு வந்த பிறகு கைகளை சுத்தமாகக் கழுவுவது,
* கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது,
* தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
* கொரோனா தடுப்பூசியைப் போல, அனைத்துக் குழந்தைகளுக்கும் காய்ச்சல் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.
* முடிந்த அளவு வெளிப்புற உணவுகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.
* வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.