காட்டு யானைகளுக்கு எமனாகும் அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடி; கோவையில் பெண் காட்டு யானை உயிரிழப்பு
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடி கடித்து காட்டு யானைகள் உயிரிழந்து வருவது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் அடுத்த வீரபாண்டி பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பெண் காட்டு யானை ஒன்று நிற்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து கோவை வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கோவை வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர், அங்கு சென்று பார்த்த போது பெண் யானை ஒன்று உடல் மெலிந்த நிலையில் நடக்க முடியமல் நின்றிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், வனத்துறை கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை மருத்துவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
மருத்துவர்கள் நடத்திய முதல் கட்ட பரிசோதனையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சுமார் 6 வயது இருக்கும் என்பதும், வாயில் அவுட்டு காய் எனப்படும் நாட்டு வெடியை கடித்ததால் வாயில் ஏற்பட்ட காயத்தால் உணவு சாப்பிட முடியாமல் சுற்றி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து யானைக்கு குளுக்கோஸ் மற்றும் மருந்துகள் வழங்கி அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிற்பகலில் அந்த யானை உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், யானை உடல்நலம் பாதிக்கப்பட்டதாக காலையில் தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக மருத்துவ குழுவினர் அங்கு வந்து யானைக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் வாயில் ஏற்பட்ட காயத்தினால் அந்த யானை உயிரிழந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான மோப்ப நாய்களை கொண்டு அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடி எங்கு வைக்கப்பட்டது என்ற கோணத்தில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் இந்த யானை கேரளாவில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வந்தது. சிசிடிவி காமிரா மூலம் தெரியவந்துள்ளதால் கேரள வனப்பகுதியில் இந்த சம்பவம் ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூழலில் ஆர்வலர்கள் கூறுகையில், "கோவை மாவட்டம் காரமடை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல பெண் யானை ஒன்று நாட்டு வெடியால் வாயில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அதற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. தொடர்ந்து கோவை மாவட்டத்தில் காட்டுப் பன்றி மற்றும் மான்களை வேட்டையாட அவுட்டுக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நாட்டு துப்பாக்கிகளை கொண்டு வன விலங்குகளை வேட்டையாடும் சம்பவம் நடைபெற்று வருவதால், வனத்துறையினர் மலைப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும். நாட்டு வெடியை யார் தயாரிக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்களை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் அவர்கள் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு காவல் துறை மூலமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடி கடித்து காட்டு யானைகள் உயிரிழந்து வருவது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.