கோவையில் லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை
பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்கள் மற்றும் மகன் மற்றும் மருமகன் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.
கோவை துடியலூர் அருகே தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள போதிலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்கள் மற்றும் மகன் மற்றும் மருமகன் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள லாட்டரி மார்ட்டினின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகில் மார்டின் ஹோமியோபதி மருத்து கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலையிலிருந்து நடைபெற்று வரும் சோனையில் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்தி ரிசர்வ் போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனை நடைபெற்று வரும் கார்ப்ரேட் அலுவலகம் அருகே 10 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குவிந்துள்ளனர். இந்த சோதனை நிறைவடைந்தால் மட்டுமே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றபட்டன என்ற விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்தது. பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனின், அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சோதனை நடத்தினர். கேரளாவில் இருந்து வந்த அமலாக்கதுறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை செய்த்ததில் 173 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்