அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம்! எடப்பாடியார் சூளுரை
வேளாண் குடி மக்களான உங்களது ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக முடிக்கப்படும். இரண்டாம் கட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் உங்கள் மனக்குறை எல்லாமே தீர்க்கப்படும்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் இரண்டாம் கட்டம் முடிக்கப்படும்- விவசாயிகள், நெசவாளர்கள் மத்தியில் புரட்சித் தமிழர் எடப்பாடியார் சூளுரை.
'மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தில், 'புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்' என்ற தேர்தல் சுற்றுப்பயணத்தை கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கியிருக்கிறார்.
இந்த பயணம் குறித்து எடப்பாடியார், ‘’மேட்டுப்பாளையம் மட்டுமின்றி கோவை மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்ற கோயிலான வனபத்ரகாளியம்மனை நேரில் தரிசித்துவிட்டு, எனது சுற்றுப்பயணத்தைத் துவக்கினேன். துவக்க நிகழ்விலேயே கழக தொண்டர்களும், நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டற்ற மகிழ்ச்சி. வனபத்ரகாளியம்மனின் துணை நமக்கு என்றென்றும் இருக்கும்.
தரிசனத்தை முடித்தகையோடு அருகாமையில் அமைந்துள்ள அம்மை அப்பன் மண்டபத்தில், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தேன். ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமான கோரிக்கைகளை முன்வைத்தனர். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக எனக்கு வேளாண் குடி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அவர்களுக்கு பதிலளித்து நான் பேசியபோது, "அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் இரண்டு கட்டமாக அதனை மாற்றியமைத்து செயல்படுத்தத் தொடங்கினோம். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாசனம் பெறுகின்ற ஒரு ஏக்கர் கூட விடுபட்டிடாத அளவுக்கு திட்டத்தை வடிவமைத்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காண்டுகள் கடந்தும் முதல் கட்டப் பணிகள் மட்டுமே முடிந்திருக்கிறது. அதிமுக திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுவிட்டது விடியா திமுக ஆட்சி. மீண்டும் வேளாண் குடி மக்களான உங்களது ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக முடிக்கப்படும். இரண்டாம் கட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் உங்கள் மனக்குறை எல்லாமே தீர்க்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் உள்ள 6000க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரபட்டது. நானும் ஒரு விவசாயி தான், தற்போதும் நான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் என்னை எதுவும் செய்யமுடியவில்லை.
ஒரு பிள்ளையை தாய் எவ்வாறு பாதுகாக்கிறாரோ, அதேபோல் தான் விவசாயிகள் பயிர்களை பாதுகாக்கிறார்கள். மேலும், சொட்டுநீர் பாசனம் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக தான். 25 சதவீத மானியம் கொடுத்து, மத்திய அரசிடம் நிதி பெற்று அந்தத் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினேன்.
கால்நடை மருத்துவக் கல்லூரிகள் நிறுவிப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். நான் அமரிக்கா சென்றபோது, அங்கு பஃபலோ நகருக்குச் சென்று ஆய்வுசெய்து, அதனை இங்கு வந்து தமிழகத்தில் பசு ஆராய்ச்சி மையம் தொடங்கினேன். கலப்பின பசுவை உருவாக்கி, பால் உற்பத்தியை அதிகப்படுத்தவே அந்த முயற்சியை மேற்கொண்டோம். ஆடு, மீன், பன்றி, கோழி வளர்ப்பு எல்லாமே அங்கு மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. விவசாயிகளை நேரடியாக அழைத்துச்சென்று பயிற்சி அளிக்க முயற்சித்தோம். ஆட்சி மாற்றத்தில் எல்லாம் கிடப்பில் போடப்பட்டது. பசுக்களை இலவசமாக விவசாயிகளுக்கு கொடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை மறந்துவிடாதீர்கள்.
மும்மனை மின்சாரம் இலவசமாக வழங்கியது அதிமுக ஆட்சியில்தான். வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்ததும் அதிமுக ஆட்சி தான். வனவிலங்குகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகளை உடனடியாக அரசு அதிகாரிகள் மூலம் மதிப்பீடு செய்து, அதன் இழப்பீட்டை நான் முதலமைச்சராக இருந்தபோது கொடுத்தேன். இங்கு அரசியல் பேசக்கூடாது என்று தான் நினைத்தேன் எனினும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் நான்கு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், வேளாண் விவசாயிகள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் பசுமை வீடு கட்டி கொடுக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் இருந்தபோது தான், அண்டை மாநிலமான கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க வழி வகுத்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நதிநீர் பிரச்சினை குறித்து விளம்பர ஸ்டாலின் மாடல் அரசு பேசவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. நீர் சுத்தகரிப்பு திட்டத்திற்காக 11,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2019ம் ஆண்டில் நான் முதலமைச்சராக இருந்தபோது பாரதப் பிரதமரை சந்தித்து, ’நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை விளக்கி, அதற்கான நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிமுக அரசாங்கம் என்பது மக்களுக்கான அரசாங்கம், விவசாயிகளுக்கான அரசாங்கம். இதில் மாற்றுக்கருத்து இல்லை. எப்போதும் நாங்கள் விவசாயிகள் உடனும், மக்களுடனும் தான் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொண்டு, விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் என அனைவரும் தெரிவித்த கருத்துகள் மற்றும் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை, அதிமுக ஆட்சி அமைந்ததும் தக்க நடவடிக்கை எடுத்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்று உறுதி அளித்திருந்தார்.





















