மேட்டுப்பாளையத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது; எடப்பாடி பழனிசாமி கண்டனம்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை சந்திப்பதற்காக சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
![மேட்டுப்பாளையத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது; எடப்பாடி பழனிசாமி கண்டனம் Edappadi Palanisami condemns the arrest of admk legislators in Mettupalayam TNN மேட்டுப்பாளையத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது; எடப்பாடி பழனிசாமி கண்டனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/cff7eb4b543d12b7e19d7efb5adc44201676122034324333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த 31ம் தேதி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. அப்போது குப்பைகள் அகற்றுவது தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது 17வது வார்டு திமுக உறுப்பினர் ரவிக்குமார் என்பவர், நாற்காலி ஒன்றை அதிமுக உறுப்பினர்கள் மீது வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
அதேசமயம் நாற்காலி தூக்கி வீசிய ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக உறுப்பினர்கள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்களை சந்திப்பதற்காக கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினருடன் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
![திமுக - அதிமுக மோதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/872b3612019c3a6f937af4929eafcf931698985428754188_original.jpg)
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், அதிமுகவினரை உள்ளே விட அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் துறையினரின் தடுப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்ற எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 9 அதிமுக கவுன்சிலர்களையும் காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக நகர மன்றத் தலைவரின் கணவர் அஷ்ரப் அலி ஏற்பாட்டில் திமுக நகர மன்ற வார்டு உறுப்பினர்கள், கழக வார்டு உறுப்பினர்கள் மீது நாற்காலியை எடுத்துப் போட்டு தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். திமுக நகர மன்ற உறுப்பினர்கள் ரவி மற்றும் ஸ்ரீராம் ஆகிய இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையரிடமும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
நகர மன்ற அவசரக் கூட்டத்தின் தொடக்கத்தில் எந்தவிதமான தீர்மானங்களும் கழக உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத சூழ்நிலையில், திடீரென்று திமுக நகர மன்றத் தலைவர் ‘தீர்மானங்கள் ஆல் பாஸ்' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இவற்றைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய வார்டு உறுப்பினர்களை பார்வையிடச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் A.K. செல்வராஜ். P.R.G. அருண்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது. தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்களைக் கைது செய்யாமல், அதிமுகவினரை கைது செய்த, விடியா திமுகவின் ஏவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)