1330 என்ற எண் வடிவத்தில் நின்று பறை இசைத்த கலைஞர்கள்; கோவையை அதிரவைத்த திருக்குறள் பறைப்படை
பறை மாநாட்டின் சிறப்பு அம்சமாக 1330 திருக்குறள் பறைப் படை என்ற பெயரில் 1330 என்ற எண் வடிவில் நின்றபடி 300 க்கும் மேற்பட்ட பறை இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பறை இசைத்து அசத்தினர்.
கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க்கல்லூரியில் உலகப்பொது இசை பறை மாநாடு நடைபெற்றது. உலகில் முதல் முறையாக நடைபெற்ற இந்த பறை இசை மாநாட்டினை நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தியது. இந்த மாநாட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பறை இசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் உட்பட தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டை துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன் தொல்லிசை கருவிகள் கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு இசைக்கருவிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள சில இசைக் கருவிகளையும் சாமிநாதன் இசைத்து பார்த்தார்.
ஒரு நாள் நடைபெற்ற இந்த பறை மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்லிசை கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி இந்நிகழ்வில் பறை இசை தொடர்பான நூல்கள் வெளியீடு, கருத்தரங்கு நிகழ்ச்சிகள், நாட்டார் கலை நிகழ்ச்சிகள், கலையக விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை ஏராளமான இசைக்கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்த பறை மாநாட்டின் சிறப்பு அம்சமாக 1330 திருக்குறள் பறைப் படை என்ற பெயரில் 1330 என்ற எண் வடிவில் நின்றபடி 300 க்கும் மேற்பட்ட பறை இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பறை இசைத்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் மாவட்ட அரசு இடைப்பள்ளிக்கான கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன் துவக்கி வைத்தார். வட்டப்பறை, மண்மேளம், பெரியமேளம், எருதுகட்டு மேளம் உள்ளிட்ட பறைகளை பறை இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் வாசித்தனர். மேலும் திருக்குறளில் பறை பற்றிய குறிப்புகல் இடம்பெற்றுள்ள திருக்குறள்களை எடுத்துரைத்து, பறை இசைக்கப்பட்டது. உலகப் பொதுமறையாக உள்ள திருக்குறளை போல, உலகப் பொது இசையாக உள்ள பறையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் 1330 என்ற எண் வடிவத்தில் நின்று பறை இசைத்ததாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் பல்வேறு வகையான பறைகள் அதிரும் வகையில் இசைக்கப்பட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பறை மாநாட்டினை கண்டு இரசித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்