கோவையில் பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படத்தை மாட்டிய பாஜக - அதிரடியாக அகற்றிய திமுக கவுன்சிலர்
பேரூராட்சி செயல் அலுவலர் அறையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திமுகவினர் பிரதமர் மோடியின் படத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே பேரூராட்சி வெள்ளலூர் பேரூராட்சி. இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் 8 வார்டுகளில் அதிமுகவும், 6 வார்டுகளில் திமுகவும், ஒரு வார்டில் சுயேச்சையும் வெற்றி பெற்றனர். 11 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனகராஜ் என்பவர், திமுகவில் இணைந்ததால் திமுகவின் பலம் 7 ஆக அதிகரித்தது. இருந்த போதும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால், அதிமுகவை சேர்ந்த மருதாசலம் என்பவர் பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர், பேரூராட்சி செயல் அலுவலர் அறையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திமுகவினர் பிரதமர் மோடியின் படத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தினர். அப்போது திமுக கவுன்சிலர் கனகராஜ் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அகற்றினார்.
இது குறித்து பேசிய கனகராஜ், “ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்படுவதில்லை. விடுமுறை நாளான இன்று அனுமதியின்றி பாஜகவினர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துச் சென்றுள்ளனர். பேரூராட்சி அலுவலகத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் எப்படி பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்கலாம்? மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் அனுமதி பெற்று வந்து பிரதமர் மோடியின் படத்தை வைத்துக் கொள்ளுமாறு கூறினோம்” என அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றப்பட்டது குறித்து தகவல் அறிந்த பாஜகவினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் அனுமதியுடன் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்ததாகவும், அத்துமீறி பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்றிய திமுக கவுன்சிலரை கைது செய்யக் கோரி, பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போத்தனூர் காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போத்தனூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்