கோவையில் ரயில் மோதி உயிரிழந்த யானை கர்ப்பமாக இருந்தது - பிரேதபரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
உயிரிழந்த யானைகளின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் சுமார் 3 மாத கரு இருந்தது தெரியவந்தது.
கோவை போத்தனூர் முதல் கேரள மாநிலம் வரையிலான இரயில் வழித்தடம், தமிழக கேரள எல்லை பகுதியில் வனப்பகுதியை ஒட்டி செல்கிறது. கோவையில் இருந்து கேரளா செல்லும் வழித்தடம் மற்றும் கேரளாவில் இருந்து கோவை வரும் வழித்தடம் என இரண்டு இரயில் பாதைகள் உள்ளன. நேற்றிரவு மங்களூர் - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் கேரளாவில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தது. வாளையாறை கடந்து நவக்கரை அடுத்த மாவுத்தம்பதி கிராமத்தின் மரப்பாலம் தோட்டம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் வந்த போது, ரயில் தண்டவாளத்தை 3 காட்டு யானைகள் கடப்பதை கண்டு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் ரயிலை நிறுத்துவதற்கு முன்பாக அதி வேகத்தில் வந்த ரயில், 3 யானைகள் மீதும் மோதியது. இதில் 3 யானைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தன. இதில் ஒரு யானை தண்டவாளத்திலேயே விழுந்துவிட, 2 யானைகள் அருகில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து ரயில் ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடலை அப்புறப்படுத்தியதை அடுத்து அடுத்து, இரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
போத்தனூர் – பாலக்காடு இரடில் பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3 யானைகள் ஒரே நேரத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வனப்பகுதி வழியாக செல்லும் அதிவேக ரயில்களில் அடிபட்டு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 186 யானைகள் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாதையில் மட்டும் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் இதுவரை 28 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன.
தமிழக கேரள எல்லையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாதையை தினந்தோறும் ஏராளமான வனவிலங்குகள் கடந்து சென்று வருகின்றன. குறிப்பாக யானைகள் இந்தப்பகுதியை அதிகளவில் கடப்பதால், ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. பலமுறை இந்த பாதையில் யானைகள் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், மீண்டும் அதிவேகத்தில் ரயில்களை இயக்குவதே விபத்திற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் யானைகள் கடப்பது வாடிக்கையாக இருப்பதால், இப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும் எனவும், யானைகள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் உயிரிழந்த யானைகளின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் சுமார் 3 மாத கரு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வயிற்றில் இருந்து கரு எடுக்கப்பட்டது. கருவுற்று இருந்த யானை உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மற்றும் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார், “வாளையார் - மதுக்கரை இடையே ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது 3 யானைகள் அடிபட்டு இறந்துள்ளன. இரண்டு யானைகள் 30 மீட்டர் தூரத்திலும், 140 மீட்டர் தூரம் தள்ளி பெண் யானையும் இறந்து இருக்கின்றது. இந்த பகுதியில் உள்ள இரண்டு ரயில் பாதைகளில் ’ஏ’ பாதையில் ரயில் போக்குவரத்து எப்போதும் குறைவாக இருக்கும். நேற்று ’ஏ’ ரயில் பாதையில் எதிர்பாராத விதமாக விபத்து நடைபெற்றுள்ளது.
மேலும் வனத்துறை, ரயில்வே துறை உடன்பாட்டின் படி ரயில் சரியான வேகத்தில் இயக்கப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகின்றது. இறந்த 3 யானைகளில் 25 வயது மதிக்கதக்க பெண் யானை, 15 வயது மதிக்கதக்க மக்னா யானை, 6 வயது யானை உயிரிழந்துள்ளது. ரயில் சரியான வேகத்தில் சென்றதா என்பது குறித்தும், எப்படி யானை இறந்தது என்பது குறித்து ரயில் ஓட்டுனர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. விசாரணைக்கு பின்னர் நிச்சயம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என அவர் தெரிவித்தார்.