’புதிய மொபைல் ஆப்களைப் பற்றி முழுமையாக தெரிந்து பயன்படுத்தவேண்டும்’ - கோவை காவல் ஆணையர் அறிவுரை
”சைபர் குற்றம் நடந்த பின் பணத்தை மீட்பதில் சிக்கல் இருக்கின்றது. இது போன்ற குற்றங்கள் பல ஆயிரம் கி.மீ தொலைவில் இருந்து அல்லது வேறு நாடுகளில் இருந்து சைபர் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றது”
கோவையில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், “பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையில் இருந்து காத்மண்டு வரை இரு சக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கின்றனர். கோவை மாநகரை பொறுத்தவரை சைபர் குற்றங்களை, குற்றங்கள் நடக்கும் முன் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகின்றது.
சைபர் குற்றம் நடந்த பின் பணத்தை மீட்பதில் சிக்கல் இருக்கின்றது. இது போன்ற குற்றங்கள் பல ஆயிரம் கி.மீ தொலைவில் இருந்து அல்லது வேறு நாடுகளில் இருந்து சைபர் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றது. கோவை மாநகர சைபர் கிரைம் விங் இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்து வருகின்றது. பண இழப்பை தடுத்து வருகின்றோம். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அவர்களில் பெயர், புகழை பாதிக்கும் வகையில் குற்றங்கள் நடப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. கல்லூரி மாணவர்கள் சமூக வலைதளங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.
ஒரு சில நாட்களாக பிரைன்டோ என்ற "கே" செயலியில் பதிவு செய்து பயன்படுத்தி வரும் போது தாக்குதல், பணம் பறித்தல் நிகழ்வுகள் நடப்பதாக புகார் வந்துள்ளது. ஒரு தொடர்பாக ஒரு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் பிற வழக்குகளில் தேடி வருகின்றோம். புதிய மொபைல் ஆப் வந்து கொண்டே இருக்கின்றது. புதிய மொபைல் ஆப்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின் பயன்படுத்தலாம். லோன் ஆப் உட்பட புதியதாக எந்த செயலி வந்தாலும் அது குறித்து தெரிந்த பின் பயன்படுத்தினால் பிரச்சினைகள் தவிர்க்கலாம்.
கோவை மாநகரில் மாதம் 500 க்கும் மேற்பட்ட அனைத்து விதமான புகார்கள் வருகின்றது. சைபர் கிரைம் விங்கிற்கு 10 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சைபர் கிரைம் குறித்து இரு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. உதவி ஆணையர் தலைமையில் சைபர் யூனிட் துவங்கும் திட்டமும் இருக்கின்றது. ஆனால் ஒரு சைபர் கிரைம் காவல் நிலையம் மட்டுமே இருக்கும். உணர்ச்சி ரீதியான குற்றங்கள் அதிகமாகி வருகின்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக புகார் கொடுக்க வேண்டும்.
கல்லூரிகளில் சைபர் கிளப் ஏற்படுத்த பட்டு வருகின்றது. இதுவரை 81 கிளப்கள் உருவாக்கப்பட்டு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு செய்திகளை மாணவர்களிடம் கொண்டு செல்ல கவனம் செலுத்துகிறோம். காவல் நிலையத்தில் வேலை என கூறியும் நூதன மோசடி நடைபெறுகின்றது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. தொழில் நிறுவனம், அரசு சார்ந்த நிறுவனம் என எதுவாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒவ்வாத விடயங்கள் கூறினால் நம்ப கூடாது. கால கட்டத்திற்கு ஏற்ப மோசடிகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பணம் பரிமாற்றம் தொடர்பான விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சிசிடிவி கேமராக்களை பொறுத்து வரை பெரும்பாலான இடங்களில் இருக்கின்றது. இடைவெளி இருக்கும் பகுதிகளில் அவற்றை நிறுவ நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது காவல் துறை பாதுகாப்பில் இருப்பார்கள். இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்குவது, குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். முக்கிய சாலைகளில் 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் பேரிகார்டு அமைத்து கண்காணிக்கப்படும். கோவையில் இரவு நேரங்களில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்கள் இயக்குவதை தடுக்க 3 சிறப்பு படைகள் அமைத்து கண்காணித்து வருகின்றோம். 30 க்கும் மேற்பட்ட வாகனங்களை பிடித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலை, திருச்சி சாலை பகுதிகளில் மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது செயல்பட கூடாது. கடந்த ஒரு வாரத்தில் எல்எஸ்டி , மெத்தபேட்டமைன் போன்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.