காரில் கடத்தப்பட்ட 200 கிலோ புகையிலை ; 2 கி.மீ சேஸ் செய்து பிடித்த போலீசார்..!
அதி வேகமாக வந்த காரை வழி மறித்து காவலர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் அதி வேகமாக சென்றது. இதனால் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அந்தக் காரை துரத்திச் சென்றனர்.
கோவை அருகே காரில் கடத்திய 200 கிலோ புகையிலைப் பொருட்களை காவல் துறையினர் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் செல்லப்பாண்டி, பிரபு ஆகிய இரண்டு காவலர்கள், நீலம்பூர் சுங்க சாவடி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதி வேகமாக வந்த காரை வழி மறித்து காவலர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் அதி வேகமாக சென்றது. இதனால் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அந்தக் காரை பின் தொடர்ந்து துரத்திச் சென்றனர். 2 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் காவல் துறையினர் அந்த காரை துரத்திச் சென்றனர். காவல் துறையினர் துரத்தி வருவதை பார்த்ததும், சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு அதிலிருந்து இரண்டு பேரும் இறங்கி காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடினர். இருப்பினும் காவல் துறையினர் விடாமல் துரத்திச் சென்று, அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா மற்றும் அசோக் என்பதும், சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரா மற்றும் அசோக் ஆகிய இருவரையும் சூலூர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 200 கிலோ கிராம் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மகேந்திரா மற்றும் அசோக் ஆகிய இருவர் மீதும் சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த காவல் துறையினருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பான் மாசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக புகையிலை பொருட்கள் விற்பனையில் அதிகளவு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க காவல் துறையினர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மை காலமாக புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அதிகளவு புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.