Crime : கோவை: ரூ. 33 லட்சம் மதிப்பு: தங்க நகைகளுடன் எஸ்கேப் ஆன நகைக்கடை தொழிலாளி: பறந்து சென்று பிடித்த காவல்துறை
பியூஸ் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் 621.660 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்தார். தங்க நகைகளின் மதிப்பு 33 லட்சம் ரூபாய் என்று அவர் தெரிவித்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பியூஸ் என்பவர் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் தங்க நகைகளை ஆர்டர் தருபவர்களுக்கு ஆபரணங்களை வடிவமைத்து, சப்ளை செய்து வருகிறார். இந்த தங்க நகை பட்டறையில் மேற்கு வங்கம் உள்ளிட்ட வட, வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு பணியாற்றிய மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசேன், பட்டறையில் தங்க நகைகளை வேறு கடைக்கு ஃபினிஸிங் செய்ய தருகின்ற நகைகளை பெற்று பட்டறையில் ஒப்படைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தங்க நகைகளை ஃபினிசிங் செய்யும் இடத்தில் இருந்து கை சங்கிலி, தோடு உள்ளிட்ட தங்க நகைகளை பெற்று உரிமையாளரிடம் ஒப்படைக்கவில்லை. பட்டறை உரிமையாளர் பியூஸ், சதாம் உசேனுக்கு தொலைபேசியில் அழைத்து உள்ளார். சாதாம் உசைனின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. சதாம் உசைன் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது, அங்கும் அவர் அங்கு இல்லை. அவர் துணி உள்ளிட்ட உடமைகள் மட்டும் இருந்தது.
நண்பர்களிடம் விசாரித்த போது, சதாம் உசைன் அறைக்கு வரவே இல்லை என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த பியூஸ் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் 621.660 கிராம் எடையுள்ள தங்க நகைகளை தனது கடையில் வேலைப்பார்த்த நபர், திருடிச் சென்றதாக புகார் அளித்தார். தங்க நகைகளின் மதிப்பு 33 லட்சம் ரூபாய் என்று அவர் தெரிவித்தார். பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில் சதாம் உசேன் தங்க நகைகளை திருடிவிட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இந்நிலையில் தனிப்படை காவல் துறையினர் மேற்கு வங்க மாநிலத்தில் நார்ஜூல் நகர் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் சதாம் உசேன் பதுங்கி இருப்பது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக விமானத்தில் சென்ற தனிப்படை காவல் துறையினர், சதாம் உசேனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 33 இலட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே கோவை பீளமேடு பகுதியில் நடந்த காப்பர் கம்பிகள் திருட்டு வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சிலம்பரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பீளமேடு பகுதியில் துர்கா டிரான்ஸ்பார்மர் பிரைவட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் கடந்த ஜனவரி 30 ம் தேதி 14 இலட்ச ரூபாய் மதிப்பிலான 1440 கிலோ காப்பர் கம்பிகள் திருடப்பட்டது. இந்த வழக்கில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி துப்பு துலக்கி 9 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளன. 1440 கிலோ காப்பர் கம்பிகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த கும்பல் இதேபோல தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டதும், பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கோவை மாநகரில் குற்றங்களை குறைக்க ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹாட் ஸ்பாட்டுகளை கண்டறிந்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் குறைந்துள்ளது.” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்