கோவை: பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பிரதான கால்வாயில் உடைப்பு ; சீரமைப்பு பணிகள் துவக்கம்
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தில் புதிய, பழைய ஆயக்கட்டுகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கால்வாயில் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
கோவை மாவட்டத்தில் பி.ஏ.பி என அழைக்கப்படும் பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் ஆழியாறு, பாலாறு படுகைகள் மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு, பாலாறு ஆறுகள் மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் கிடைத்து வருகிறது. இதில் சுமார் 3 டி.எம்.சி. குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது.
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தில் புதிய, பழைய ஆயக்கட்டுகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் புதிய ஆயக்கட்டில் ஆழியார் அணையிலிருந்து துவங்கும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய் 40 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த கால்வாய் மூலம் நீரை பெற்று சுமார் 12,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. அணையில் இருந்து சுமார் 17வது கி.மீ தூரத்தில் பிரதான கால்வாயில் எதிர்பாராத விதமாக உடைப்பு ஏற்பட்டது. பிரதான கால்வாயில் இரு புறங்களிலும் ஏற்பட்ட உடைப்பால் சுமார் 80 கன அடி தண்ணீர் இருபுறம் உள்ள தோப்புகளில் வீணாகச் சென்றது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப் பணி துறை அதிகாரிகள் கால்வாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து காளியாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறுகையில், ”வேட்டைக்காரன் புதூர் கால்வாயில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வருகிற மார்ச் மாதம் வரை வழங்கப்பட வேண்டும். அதற்குள் கால்வாயில் திடீரென எதிர்பாராத விதமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பொதுப் பணித் துறையினர் விரைந்து சீரமைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்