கோவை மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்; காவலரிடம் விசாரணை
கோவை மத்திய சிறை ஜெயிலர் சிவராசன் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஜெயராமன் மீது பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் சிறைக் கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்தது தொடர்பாக காவலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை காந்திபுரம் பகுதியில் கோவை மத்திய சிறை இயங்கி வருகிறது. இந்த சிறையில் 2300 க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் பாதுகாப்பு பணிகளில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சிறை வளாகத்தில் அவ்வப்போது கஞ்சா, செல்போன் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பது குறித்து சிறை காவலர்கள் சிறை கைதிகளிடம் சோதனை நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் கோவை மத்திய சிறை காவலர்களுக்கு சிறையில் உள்ள ஏழாவது டவர் பகுதிக்கு அருகே உள்ள 19வது அடைப்பு அறையில் உள்ள, 2 வருட தண்டனை கைதியான ஜெயராம் (23) என்பவர் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சிறைக் காவலர்கள் ஜெயராமிடம் சோதனை செய்தனர். அதில் ஜெயராம் தனது ஆசனவாயில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதனைத்தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த சுமார், 8 கிராம் எடை கொண்ட கஞ்சாவை காவலர்களிடம் எடுத்து கொடுத்தார்.
இதையடுத்து காவலர்கள் அவரிடம் விசாரித்தில் அவருக்கு, 27வது அடைப்பு அறையில் உள்ள 20 வருட தண்டனை கைதி பார்த்தசாரதி (31) என்பவர் ஒரு வாரத்திற்கு முன் கஞ்சாவை ஜெயராமிடம் கொடுத்து ஆசனவாயில் மறைத்து வைக்கும்படி தெரிவித்ததாக கூறியுள்ளார். பின்னர் சிறைக் காவலர்கள் பார்த்தசாரதிடம் கேட்ட போது மத்திய சிறை முதல் தலைமைக் காவலர் ஜெயச்சந்திரன் என்பவர் கஞ்சாவை வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறை நிர்வாகம் கைதிகளிடமும், காவலர் ஜெயச்சந்திரனிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கோவை மத்திய சிறை ஜெயிலர் சிவராசன் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஜெயராமன் மீது பந்தயசாலை காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சிறை காவலரிடம் விசாரணை நடைபெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.