விபத்தில் சிக்கிய மாணவரை காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி எம்பி - கோவையில் நெகிழ்ச்சி
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் விபத்தில் சிக்கிய மாணவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கனிமொழி அனுப்பி வைத்தார்
திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு,குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும், நேரடியாகச் சந்தித்து மனுக்களை பெற்றனர்.
இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூர்க்கு கனிமொழி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவிநாசி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து வரும் ராபின் என்ற மாணவன் லாரி ஒன்றில் எதிர்பாராத விதமாக மோதிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த கனிமொழி தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று அந்த மாணவரை பார்த்துள்ளார். அப்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு, தி.மு.க. கட்சியை சார்ந்த ஒருவரின் வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கனிமொழி அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாணவரை சேர்த்து உள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல் நிலையை கவனித்து தெரிவிக்குமாறு மருத்துவரிடம் கூறினார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, ”முதலமைச்சரின் கட்டளைக்கு இணங்க கன்னியாகுமரியில் தொடங்கி மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கோரிக்கைகளையும் பெற்று வருகிறோம். அதே சமயம் தொழில அமைப்புகள், விவசாயிகள், பல்வேறு சங்கங்கள் உள்ளிட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறோம். மக்களும், தொழில் அமைப்பினரும் எங்களை சந்தித்து வருகின்றனர். மீதமுள்ள பகுதிகளுக்கும் விரைவில் சென்று கோரிக்கைகளை பெற இருக்கிறோம். மேலும் கோவையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் தொழில அமைப்பினர் குறிப்பாக, சிறு குறு தொழில் செய்பவர்கள் கடந்த காலகட்டத்தில் இருந்து பிரச்சனை சந்தித்து வருகின்றனர். பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா போன்ற காலங்களிலும் பிரச்சனைகள் தொடர்கிறது. சிறுகுரு தொழில் அமைப்பினர் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஜி.எஸ்.டி.யில் நிறைய சிக்கல்கள் உள்ளது. அதை கட்ட முடியாமல் சிறு குறு அமைப்பினர். தொழில் செய்ய முடியாத சூழ்நிலைகளில் இருப்பதாகவும் கோரிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். இவை அனைத்தும் தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்வோம்.
கோவைக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை செய்ய முடியாமல் போனதற்கு மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டதன் காரணம். ரயில்வே துறையில் கூட திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. நிதி குறைவாகவே ஒதுக்கியதால் திட்டங்களை செய்ய முடியவில்லை. கோவையை புறக்கணிக்கவில்லை. பல தொழிற்சாலைகளுக்கு கோவை மையமாக உள்ளது. கோவை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் இங்கு தொழில் கூடங்கள் உருவாக்கினார். பல பன்னாட்டு நிறுவனங்கள் கோவை வருவதற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், முதலீடுகளை கொண்டுவருக்கு பணி செய்து வருகிறார். மேலும் தொழிலாளர்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.