பூங்காவில் மின்சாரம் தாக்கி குழந்தைகள் மரணம்; பாதுகாப்பு குறைபாடே காரணம்
சறுக்கு விளையாட்டு விளையாடிக் கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர்.
கோவை சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்காவில் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே மின்சாரம் தாக்கி குழந்தைகள் உயிரிழந்ததாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் ராமன் விகார் என்ற இந்திய ராணுவ வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் மூத்த மகன் ஜியான்ஸ் ரெட்டி (6), பாலச்சந்தர் என்பவரின் மகள் வியோமா பிரியா (8) ஆகிய இரு குழந்தைகளும் நேற்று மாலை அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். மாலை 6.50 மணி அளவில் சறுக்கு விளையாட்டு விளையாடிக் கொண்டு இருத்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர். குழந்தைகள் ஜியான்ஸ் ரெட்டி, பிரியா ஆகிய இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு
இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிஆர்பிசி 174 என்ற இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் துறைய்யினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே விபத்து ஏற்பட்ட சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாக பூங்காவை மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கோவை வடமதுரை மின்வாரிய உட்கோட்ட செயற்பொறியாளர் சுந்தரம் மற்றும் துணை செயற்பொறியாளர் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வு முடித்து வெளியில் வந்த அதிகாரிகளிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேட்டி அளித்த அதிகாரிகள், குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்தி இருக்கின்றனர் எனவும், பூங்காவை மேம்படுத்தும் போது பூங்காவின் கீழே மின் கேபிள் அவர்கள் போட்டு இருக்கின்றனர் எனவும், தெரு விளக்கு போடும் போது மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இறந்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தனர். இந்த இடத்திற்கு மின்வாரிய பொறுப்பு கிடையாது எனவும், அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் கூறிய அவர்கள், தெருவிளக்கை அவர்கள் தான் பராமரித்து வருகின்றனர் எனத் தெரிவித்தனர். அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதால் ஆய்வு செய்ய வந்ததாகவும், இதை அறிக்கையாக உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க இருப்பதாகவும் கூறினர்.
குடியிருப்புவாசிகள் சோகம்
இதனிடையே சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக குழந்தைகளின் உடல் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தையின் உறவினர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடலை வாங்க காத்திருக்கின்றனர். பி்ரேத பரிசோதனைக்கு பின்பு சிறுவன் ஜியான்ஸ் உடல் அவர்களது சொந்த ஊரான ஆந்திராவிற்கு எடுத்து செல்லப்படுகின்றது. குழந்தை பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு மின்மயானத்தில் எரியூட்டபட இருக்கின்றது. இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.